நத்தம், நத்தம் பகுதியில் மழை வேண்டி கோயில் காளைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நத்தம் சுற்று வட்டார கிராமங்களில் கோயிலுக்கென பொதுமக்கள் சார்பில் காளை மாடுகள் வளர்ப்பது வழக்கம். பொங்கல், ஆண்டு உற்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் காளையை தெய்வமாக மதித்து கிராமத்தினர் பூஜை செய்து வழிபடுவர். நத்தம் பகுதியில் இந்த ஆண்டு பருவ மழை ஒரு முறை மட்டுமே பெய்தது விவசாயிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது. எனவே லிங்கவாடியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முத்தாலம்மன் கோயில் காளைக்கு பூஜை செய்தனர். காளைக்கு மாலை அணிவித்து, வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து சென்று சிறப்பு செய்தனர். பின், முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளானோர் பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.