பதிவு செய்த நாள்
14
டிச
2011
11:12
கும்பகோணம்: இலந்துறை சுந்தரேசுவரசுவாமி கோவிலில் கார்த்திகை கடைச்செவ்வாய் தீர்த்தவாரியில் பக்தர்கள் பலர் புனிதநீராடினர்.கும்பகோணம் அருகிலுள்ள இலந்துறையில் அபிராமி உடனாய சுந்தரேசுவரசுவாமி கோவில் உள்ளது. செவ்வாய் தோஷ நிவாரண தலமாக விளங்கும் இத்தலம் காசியபர், அகத்தியர், கண்வர், பிருகு, அத்திரி, கபிலர், மதங்கர், வியாசர், துர்வாசர், பரத்துவாசர், சதானந்தர், யாக்ஞவல்கியர், சூரியன் முதலியோர், ஹேஹயன், நளன் முதலிய சக்கரவர்த்திகள் பூஜித்தும், செவ்வாய் கிரகம் அருளடைத்தும் ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் சூரியன் பூஜிப்பதுமான சிறப்பு பெற்றது.
கார்த்திகை முதல் செவ்வாயில் இங்கு வியாசரால் உண்டாக்கப்பட்ட வியாசகுளத்தில் மூழ்குவோர் மைந்தனைப் பெறுதலும், இரண்டாம் செவ்வாயில் செல்வத்தையும், மூன்றாம் செவ்வாயில் ஞானத்தையும், நான்காம் செவ்வாயில் நினைத்ததை அடைதலும், ஐந்தாவது உண்டேல் போக மோட்சங்களையும் அளிக்கவல்லது என்று கூறப்படுகிறது.சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைச்செவ்வாய் தீர்த்தவாரி சிறப்பாக நடப்பது வழக்கம். இவ்வாண்டும் நேற்று மதியம் 12 மணிக்கு திருமுறைகள் புடைசூழ இசைமிகு நாதஸ்வரத்துடன் அபிராமி அம்பாளோடு சுந்தரேசபெருமாள் ரிஷப காட்சியோடு தன் குமாரர்களுடன் வீதியுலா வந்தார். மூஞ்சூர் வாகனத்தில் விநாயகர் முன்னே செல்ல, மயில் வாகனத்தில் சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் புஷ்பலங்காரத்தில் சென்றார். தொடர்ந்து பிரியாவிடைநாயகி அம்பிகா சமேத சுந்தரேசுவரர் ரிஷப வாகனத்திலும், தனியே அபிராமி அம்பாள் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் என தனித்தனியாக வீதியுலா சென்றனர். பகல் 2.45 மணிக்கு கோவிலை வந்தடைந்தது.தொடர்ந்து வியாசர்குளத்தில் 3.10 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியில் திருவிடைமருதூர் பஞ்., யூனியன்குழு தலைவர் அசோக்குமார், துணைத்தலைவர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட அ.தி.மு.க., மருத்துவர் பிரிவு துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட திரளான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். திரளான ஆண்களும், பெண்களும் வியாசர் குளத்தில் புனிதநீராடினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அபிராமி அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. பூஜைகளை சிவமணி சிவாச்சாரியார் செய்தார்.தீர்த்தவாரி விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பரணிதரன் மற்றும் இலந்துறை கிராமவாசிகள் செய்திருந்தனர்.