பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
காரியாபட்டி: ராமாயணத்தில், ராவண யுத்தத்தில் வெற்றி பெற்று, சீதையை மீட்டார் ராமபிரான். சீதாதேவியுடன், லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட படைபரிவாரங்களுடன் சொந்த பூமியான அயோத்திக்கு சென்றார். அப்போது களைப்பு ஏற்பட அழகிய சோலைகளாக காட்சி தந்த ஒரு இடத்தை கண்டு ஓய்வெடுக்க விரும்பினார். அந்த இடம்தான் காரியாபட்டி அச்சங்குளம். அங்கு தங்கிய போது மனமகிழ்ச்சியை, புத்துணர்வையும் உணர்ந்தனர். அதே நேரத்தில் அங்கிருந்த அனைவருக்கும் தண்ணீர் தாகம் எடுக்க தாகத்தையும் தீர்க்கும் பொறுப்பை லட்சுமணனிடத்தில் கொடுத்தார் ராமபிரான். உடனே அந்த பணியை செய்து முடிக்க ஆயத்தமான லட்சுமணன், வடதிசையில் நகர்ந்து தன் தோளில் தொங்கிய வில்லெடுத்து, ராம நாமத்தை சொல்லி ஒரு பாணத்தை எய்தார் லட்சுமணன். அந்த அம்பு ஓர் இடத்தில் குத்தி நிற்க அங்கிருந்து தண்ணீர் பீறிட்டு அடித்தது. தாகத்தில் தவித்துக் கிடந்தவர்களுக்கு தண்ணீரை கண்டதும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரை அள்ளி குடித்தனர். பின் அதுவே கவுண்டல்ய நதியாக ஓடுகிறது.
பட்டாபிேஷக காட்சி: சில நாட்கள் கழித்து அயோத்தியை அடைந்த ராமபிரான், சீதையை மீட்க உதவிய அனைவருக்கும் பரிசு பொருட்களை வாரி வழங்கினார். எப்போதுமே ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு தன் நெஞ்சில் சுமந்து வரும் அனுமானுக்கு பரிசு கொடுக்க நினைக்கும் போது, எதுவுமே இல்லை என யோசித்ததை அறிந்தார் சீதாதேவி. உடனே நீங்கள் எனக்கு கொடுத்த முத்துமாலையை அனுமனுக்கு பரிசாக அளிக்கலாமே என சீதாதேவி கூறினார். மனம்மகிழ்ந்த ராமபிரான், அதையே அனுமனுக்கு கொடுத்து மகிழ்ந்ததாக ஐதீகம் உண்டு. அந்த புராணத்தை நினைவூட்டும் விதமாகத்தான் அச்சங்குளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நடுவில் ராமபிரான், இடது பக்கத்தில் சீதாதேவி அமர்ந்த திருக்கோலம், வலது பக்கத்தில் லட்சுமணன் வில்லோடு சேவித்தபடி காட்சி தருகிறார். சீதாதேவிக்கு வடக்கு பக்கத்தில் தெற்கு நோக்கி அனுமன் நின்றபடி சேவித்துக் கொண்டிருக்கிறார். அனுமனுக்கு முத்துமாலை வழங்குவதற்காக ராமபிரான் கையில் வைத்தபடி அமர்ந்த பட்டாபிேஷக திருக்கோல காட்சியும் இங்கு உள்ளது. ஆக ஒரே கருவறையில் இரண்டு அனுமன்கள் உள்ளது சிறப்பு வாய்ந்தது. ராமபிரானின் திருவடியை தாங்கிய வண்ணம் அமர்ந்திருக்கும் அனுமன் காட்சி காண்போரை கவரும் வண்ணமாக உள்ளது.
ராமேஸ்வரம் இணையாக 1835ல் மறுபிரதிஷ்டையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் ஆதாரமாக உள்ளது. ஆக, ஆயிரம் ஆண்டுகளை கடந்ததாககணக்கிடப்பட்டுள்ளது. ராமானுஜர், நம்மாழ்வார் பாடிய பாடல்கள் புகழ்பெற்ற ஸ்தலம் இது. அரசமரமும், பவளமல்லியும் ஸ்தல விருட்சங்களாக உள்ளன. தெற்கு பிரகாரத்தில் விஷ்ணுவிநாயகர் சன்னதியும், வடக்கு பக்கத்தில் ஐயப்பன் சன்னதியும், கோயிலின் சிறப்பை மெருகூட்டுகிறது. நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், ராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து, தோஷ நிவர்த்தி செய்து முடி காணிக்கை செலுத்தி ராமேஸ்வரத்திற்கு இணையான பலனை பெறலாம். சரணடைந்தோரை ரட்சிக்கும் ராமர் ஸ்தலமாக இருப்பதால் தீராத வினைகளையும் தீர்த்து,மன அமைதியை கொடுக்கும் ஆற்றல் பெற்ற ஸ்தலமாக மக்களால் போற்றப்பட்டு வருகிறது.
வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம்: இக்கோயிலில் உள்ள அமைப்பு போல் வேறு எங்கும் இல்லை. புரட்டாசி சனி, சங்கடஹர சதுர்த்தி, நவராத்திரி, அனுமன்ஜெயந்தி, புனர்பூச வழிபாடு, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்று வருகிறது. வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் அளிக்கும் திருத்தலமாக உள்ளது. மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதால், பொது மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - சுந்தரகணபதி ஐயர் ,அச்சங்குளம்