பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
பள்ளிக்கரணை, ஆதிபுரீசுவரர் கோவில் கருவறை, பிரகாரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துஉள்ளனர்.சென்னை, பள்ளிக்கரணையில் அமைந்துள்ள ஆதிபுரீசுவரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த இக்கோவில், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆன்மிக நல விரும்பிகள் சிலர் இணைந்து, அக்கோவிலை சிறிது சிறிதாக புனரமைத்து, 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அடுத்த கட்டமாக, 2013ல், 39 அடி ராஜகோபுரம் அமைத்து, 27 அடி கொடிமரத்துடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராகு, கேது பரிகார தலமாக விளங்கும், இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மழைக்காலத்தில் மழைநீர் வடிகால்வாய் மூலம் கழிவுநீர் கோவிலில் புகுந்துவிடும். அவற்றை உழவாரப் பணி செய்பவர்கள் சுத்தப்படுத்தி வந்தனர். இந்நிலையில், கோவில் நிர்வாகத்திற்கும், அவர்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, அந்தக் கோவிலில் உழவாரப் பணிகள் மேற்கொள்வதில்லை.இதனால், சமீபத்தில் பெய்த மழையில், மழைநீர் வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி, கருவறை பிரகாரத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இது, சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. முன்பு போல கோவிலும் பராமரிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து அறநிலையத்துறை தனி கவனம் செலுத்தி, அங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. - நமது நிருபர் -