பதிவு செய்த நாள்
02
டிச
2017
12:12
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கிரிவலம் வருவோர், போதிய மின் விளக்குகள் இன்றி இருளில் நடக்க வேண்டியுள்ளதால் அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலை அடுத்து, சிறப்புடையதாக திருக்கழுக்குன்றம் கிரிவலம் உள்ளது. இங்குள்ள பெரிய மலையில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரரை, சமயகுரவர்கள் நால்வரும் பல பாடல்கள் பாடியுள்ளதோடு, நேரிலும் வந்து வழிபட்டுள்ளனர். வேதகிரீஸ்வரருக்கு, நித்ய பூஜையில், நான்கு வேதங்கள் உச்சரிப்பால் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பவுர்ணமி நாளில் வர இயலாத பக்தர்கள், சோமவார நாட்களில் கிரிவலம் வருவதை காண முடிகிறது. இந்த கிரிவலப்பாதையில், பிரதான நெடுஞ்சாலை தவிர்த்து, மற்ற பகுதியில் போதிய மின் விளக்கு இன்றி, இருளில் உள்ளதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதன் காரணமாக, சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக, பவுர்ணமி கிரிவலம் வருவோர் கூறினர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து, கிரிவலப்பாதையில் கூடுதல் மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.