பதிவு செய்த நாள்
02
டிச
2017
12:12
திருத்தணி:முருகன் கோவிலில், இன்று, கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.திருத்தணி முருகன் மலைக் கோவிலில், கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் தீபத்திருவிழா, இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கவேல், தங்கக்கீரிடம், பச்சை மாணிக்கக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.மாலை, 5:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், கோவில் நுழைவு வாயில் முன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது அங்கு வைக்கப்பட்ட சொக்கப் பனையில் நெய் தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், பெரிய அகல்விளக்கில், 300 கிலோ நெய், 10 மீட்டர் நீளமுள்ள திரியில், மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த தீபத்தை பார்த்தவுடன், அனைத்து வீடு மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிப்படுவர்.இதை தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை யுடன் உற்சவ பெருமான், மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கான பக்தர்கள் மலைக்கோவில் வந்து குவிவர். எனவே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.