பதிவு செய்த நாள்
15
டிச
2011
11:12
கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலையில், மாநில அரசின் சார்பில், யானைகளுக்கான 48 நாள் சிறப்பு நல வாழ்வு முகாம், நேற்று துவங்கியது. முகாமுக்கு, தமிழக கோவில்களில் இருந்து, 37 யானைகள் நேற்று முன்தினம் வந்து சேர்ந்தன. முகாம் நேற்று துவங்கியது. யானைகள், மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. பின்னர், மாலை அணிவிக்கப்பட்டு, வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. காலை 9.00 மணிக்கு விழா துவங்கியது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன், முகாமுக்கு தலைமை வகித்து, 9.30 மணிக்கு பூஜைகளுடன் துவக்கி வைத்தார். வனத்துறை அமைச்சர் பச்சைமால் முன்னிலை வகித்தார். தொடர்ந்து யானைகளுக்கு, அமைச்சர்கள் பழங்கள் வழங்கினர். சமையல் கூடம், பாகன் ஓய்வறை, உணவு அறை, கால்நடை மருத்துவ அறை, பாகன்களுக்கான மருத்துவ அறைகளை, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
முகாம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2003-05 வரை, மூன்று முறை யானைகள் முகாம் நடந்தது; யானைகள் புத்துணர்வு பெற்றன. தி.மு.க., ஆட்சியில் இம்முகாம் நடத்தப்படவில்லை. தற்போது, மீண்டும் நடத்தப்படுகிறது. முகாமில் 37 யானைகள் பங்கேற்றுள்ளன. மீதமுள்ள 8 யானைகள் நோய், "மஸ்து காரணமாக இங்கு கொண்டுவரப்படவில்லை. முகாமில், யானைகளுக்கு தினமும் மருத்துவ ஆலோசனைப்படி, மருந்து உணவு வழங்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர். யானைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. குளிக்கும் போது, யானைகள் ஆற்று நீரை குடிப்பதைத் தவிர்ப்பதற்காக, குடிநீரை வழங்கிய பின்பே குளிக்க அனுமதிக்கப்படுகிறது. யானை பாகன்களுக்கும் தினமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. சிறப்பு முகாமில், சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தால், யானைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 48 நாட்கள் நடக்கும் யானைகள் முகாமில், யானைகள் புத்துணர்வு பெற வேண்டும் என்பதே நோக்கம். இவ்வாறு, அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார்.