பதிவு செய்த நாள்
15
டிச
2011
04:12
நான்காம் பத்து
முதல் திருமொழி
1. போதலர்ந்த
திருத்தேவனார் தொகை
தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க வந்து திரண்டு நின்ற இடமாதலால் இவ்வூருக்குத் திருத்தேவனார் தொகை என்று பெயர் வந்தது. இதைக் கீழச்சாலை என்றும் கூறுவர். இவ்வூர் திருநாங்கூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது. இது திருநாங்கூர்த் திவ்விய தேசக் கணக்கில் சேர்ந்தது.
கொச்சகக் கலிப்பா
மாதவப் பெருமாள் இருக்குமிடம் இத்தலம்
1248. போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே.
வேதப்பொருளே எம்பெருமான்
1249. யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்,
மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே.
எல்லாப் பொருளுமாவான் எம்பெருமான்
1250. வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.
தேவர்கள் தொழுமிடம் திருத்தேவனார் தொகை
1251. இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,
எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.
உலகேழு முண்டவன் உறைவிடம் இது
1252. அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,
திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.
ஆலிலையில் பள்ளி கொண்டவன் இடம் இது
1253. ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.
நரசிங்கனின் இடமே திருத்தேவனார் தொகை
1254. ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,
ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே.
மைதிலியை மணம் புரிந்தவன் மகிழ்விடம் இதுதான்
1255. வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,
காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.
குவலயாபீடத்தைக் கொன்றவன் கோயில் இது
1256. கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ
கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.
வைகுந்தத்தில் தேவரோடு இருப்பர்
1257. காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,
சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே.
அடிவரவு: போதலர்ந்த யாவருமாய் வானாடும் இந்திரன் அண்டம் ஞாலம் ஓடாத வாரார் கும்பம் காரார்-கம்பமா
இரண்டாந் திருமொழி
2. கம்பமா
திருவண்புருடோத்தமம்
இந்த சன்னதியைப் புரு÷ஷாத்தமன் சன்னதி என்று கூறுவர். இங்கே நாற்பெரும் பயன்களையும் வாரிவழங்குகிறவனாய் புரு÷ஷாத்தமன் எழுந்தருளியிருக்கிறான். அதனால் இந்தத் திவ்வியதேசம் வண்புருடோத்தமம் ஆயிற்று. கோயிலுக்கு அருகில் திருப்பாற்கடல் என்று தீர்த்தம் அமைந்துள்ளது. கடலடைத்த பெருமாள் உத்ஸவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார். இதுவும் திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1258. கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
காளியன்மீது நடனமாடியவன் கோயில் இது
1259. பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,
ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
ஆநிரை காத்தவன் உறையும் கோயில் இது
1260. அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
கம்சனைக் கொன்றவன் உறையும் கோயில் இது
1261. பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,
ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
வாணாசுரனை வென்றவன் உறைவிடம் இக்கோயில்
1262. சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
கண்ணன் உறைகோயில் வண்புருடோத்தமம்
1263. அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
இரணியனைக் கொன்றவன் கோயில் இது
1264. உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை
அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,
இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
மேகவண்ணன் மேவும் கோயில் இது
1265. வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
நான்முகனைப் படைத்தவன் உறையும் கோயில் இது
1266. இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
இவற்றைப் படிப்போர் தேவரோடு கூடுவர்
1267. மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.
அடிவரவு: கம்பமா பல்லவம் அண்டர் பருங்கை சாடு அங்கை உளைய வாளை இந்து மண்-பேரணிந்து
மூன்றாந் திருமொழி
3. பேரணிந்து
திருநாங்கூர்ச் செம்பொன் செய் கோயில்
இது திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று. செம்பொனரங்கர் கோயில் என்று இதனைக் கூறுவார்கள். இக்கோயிலில் இருக்கும் எம்பெருமானுக்குச் செம்பொனரங்கர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள் உள்ளன.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருமாலைச் செம்பொன்செய் கோயிலில் கண்டேன்
1268. பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
வானவர்கோன் வாழ்விடம் இக்கோயில்
1269. பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை,
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை,
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே.
கடல்நிற வண்ணனைக் காணலாம் இங்கே
1270. திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி
மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
அலைகடல் துயின்றவன் அமரும் கோயில் இது
1271. வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை,
அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை,
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
தசரதன் மகனை இக்கோயிலில் காணலாம்
1272. தீமனத் தரக்கர் திறலழித் தவனே என்றுசென் றடைந்தவர் தமக்கு,
தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே,
தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே
கடலில் அணைகட்டியவனைக் கண்டேன்
1273. மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை,
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.
கஞ்சனைக் காய்ந்த காளையைக் காணலாம்
1274. வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,
கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை,
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.
வேங்கடவாணனே இக்கோயிலில் உள்ளான்
1275. அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை,
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை,
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே.
அடியவரின் உள்ளத்தில் ஊறும் தேன்
1276. களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.
உலகை ஆண்டு தேவரும் ஆவர்
1277. தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி,
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே.
அடிவரவு: பேரணிந்து பிறப்பு திட வசை தீமனத்து மல்லை வெஞ்சின அன்றிய களங்கனி தேனமர்-மாற்றரசர்.
நான்காந் திருமொழி
4. மாற்றரசர்
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்
திருத்தெற்றியம்பலம் திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று. இதைப் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றும் கூறுவார்கள். இங்கே பெருமாள் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டிருக்கிறார். பெருமாள் செங்கண்மால்; தாயார் செங்கமலவல்லி இவர்களைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவர்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செங்கண்மால் திருத்தெற்றியம்பலத்தே யுள்ளார்
1278. மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை
கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,
நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,
சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
பேய்ச்சி பாலுண்டவன் வாழுமிடம் இது
1279. பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவுகொண்டபொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி,
பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும்பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர்,
நெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம்,
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
கண்ணனே திருத்தெற்றியம்பலத்து ஐயன்
1280. படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப்பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,
அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர்,
மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி,
திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
நப்பின்னை மணாளன் வாழ்விடம் இது
1281. வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி வளைமருப்பிற் கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த,
காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர்,
ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும் எழில்மதியைக் கால்தொடா விளங்கு சோதி,
சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
செங்கண்மால் வாழ்விடம் இது
1282. கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை கதிர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி,
முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர்,
மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார் முகத்து இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
இராவணன் தோள்களைத் துணித்தன் இடம் இது
1283. தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
குறளுருவான பெருமான் வாழ்விடம் இது
1284. பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர்,
கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்,
செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
வராகாவதாரம் எடுத்தவன் வாழ்விடம் இது
1285. சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்
குலுங்க, நிலமடந்தை தனையிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,
இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,
சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
உலகங்களைத் தன் வயிற்றில் அடக்கியவன் அமரும் இடம்
1286. ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்
மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம் முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர்,
ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத் தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர்,
சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
தேவர்களுள் ஒருவர் ஆவர்
1287. சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை,
கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி
பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,
சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே.
அடிவரவு: மாற்றரசர் பொற்றொடி படல் வாரார் கலை தான் பொங்கு சிலம்பின் ஏழுலகும் சீரணிந்த-தூம்புடை
ஐந்தாந் திருமொழி
5. தூம்புடை
இவ்வூர் திருநாங்கூர்த் திருப்பதிகளுள் ஒன்று. திருநாங்கூரிலிருந்து கிழக்கே அரைக்கல் தொலைவில் உள்ளது. பெருமாள் திருமணிக்கூட நாயகன். தாயார் இந்திரா தேவி. இந்த எம் பெருமான் கஜேந்திரவரதன்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆனையின் துயர் நீக்கியவன் அமரும் இடம்
1288. தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
இலங்கைமீது கணை தொடுத்தவன் இருக்கும் இடம்
1289. கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து,இலங்கை
வவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை,
கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த,
தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
நப்பின்னை தோள்புணர்ந்தவன் தங்கும் இடம்
1290. மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,
நாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
குவலயாபீடத்தை அழித்தவன் அமரும் இடம்
1291. தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி,
பூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை,
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
சூர்ப்பணகையின் காதும் மூக்கும் அறுத்தவன் ஊர்
1292. கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை,
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத,
திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
தசாவதாரம் எடுத்தவன் தங்கும் இடம்
1293. கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும்,
அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை,
ஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட,
திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.
பஞ்சபூதங்களாகிய இறைவன் தங்கும் இடம்
1294. குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
எல்லாப் பொருள்களுமானவன் தங்கும் இடம்
1295. சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும்,
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை,
பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய,
செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
முனிவரும் தேவரும் வணங்கும் இடம் இது
1296. பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை,
மூவரி லெங்கள் மூர்த்தி இவன்,என முனிவரோடு,
தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.
மண்ணுலகும் பொன்னுலகும் ஆள்வர்
1297. திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை
மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார்,
பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்
வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே.
அடிவரவு: தூம்புடை கவ்வை மாத்தொழில் தாங்கரு கருமகள் கொண்டை குன்றம் சங்கை பாவம் திங்கள்-தாவளந்து.
ஆறாந் திருமொழி
6. தாவளந்து
திருக்காவம்பாடி:கோபாலஸ்வாமி விஷயம்
இந்தத் திவ்விய தேசம் திருநாங்கூருக்குக் கிழக்கே சுமார் ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு செல்லும் வழியில் இந்தத் திவ்விய தேசம் உள்ளது. இவ்வூருக்கு அருகில் திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குறையலூர் உள்ளது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1298. தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய்,
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே.
மாவலி வேள்வியில் யாசித்தவன் ஊர் இது
1299. மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது
1300. உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,
கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய்,
பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்
கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
விபீஷணனுக்கு அரசு அளித்தவன் வாழும் இடம் இது
1301. முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்
கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,
கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
காளியன்மீது நடனமாடியவன் தங்கும் இடம்
1302. படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,
தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
பாரதப் போர் முடித்தவன் வாழ்விடம் இது
1303. மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,
பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,
நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,
கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
பாண்டவ தூதனானவன் உறைவிடம் இது
1304. மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,
பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
சத்தியபாமைக்காகக் கற்பகமரம் கொணர்ந்தவன் ஊர்
1305. ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே.
திருக்காவளந்தண்பாடியானே நமக்குக் கதி
1306. சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,
அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,
மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,
கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
அரசர்க்கு அரசர் ஆவர்
1307. மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.
அடிவரவு: தாவளந்து மண் உருத்து முனை படவரவு மல்லர் மூத்தவற்கு ஏவிளம் சந்தம் மாவளம்-கண்ணார்.
ஏழாந் திருமொழி
7. கண்ணார் கடல்
திருவெள்ளக்குளம்
இந்தத் திவ்விய தேசத்திற்கு அண்ணன் கோயில் என்றும் பெயர். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீநிவாஸன். திருமங்கைமன்னனின் நாடு ஆலி நாடு. அதன் ஒரு பகுதி திருநாங்கூர். திருமங்கையாழ்வாரின் மனைவியான குமுதவல்லித் தாயார் இங்குத் தோன்றினார். திருமங்கையாழ்வாருக்கு இவ்வூரில் மிக்க ஈடுபாடு. சீர்காழி-தரங்கம்பாடிச் சாலையில் இவ்வூர் இருக்கிறது.
கலி விருத்தம்
திருவெள்ளக்குளத்து அண்ணா! என் துன்பம் துடை
1308. கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியே னிடரைக் களையாயே.
எம் தந்தையே! என் துன்பத்தைக் களை
1309. கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே,
நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்,
செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்
எந்தாய்,அடியே னிடரைக் களையாயே.
மலையால் மழை தடுத்தவனே! இடர்களை நீக்கு
1310. குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,
நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்
நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே.
குவலயாபீடத்தின் தந்தத்தை முறித்தவனே! அருள்புரி
1311. கானார் கரிகொம் பதொசித்த களிறே,
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,
தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.
திருவெள்ளக்குளத்தாய்! என் வினையை அகற்று
1312. வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய்,
பாடா வருவேன் விணையா யினபாற்றே.
மலையதனால் அணைகட்டியவனே! அருள்செய்
1313. கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,
எல்லா இடரும் கெடுமா றருளாயே
கோபாலா! என் வினைகளைத் தீர்த்துவிடு
1314. கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.
ஆராவமுதே! அடியேனுக்கு அருள்
1315. வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,
நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,
சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆரா வமுதே, அடியேற் கருளாயே
திருமருவிய மார்பா! என்னை அடிமை கொள்
1316. பூவார் திருமா மகள்புல் லியமார்பா,
நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்
தேவா திருவெள்ளக் குளத்துறை வானே,
ஆவா அடியா னிவன்,என் றருளாயே.
இவற்றைப் படித்தோர் தேவபதவி அடைவர்
1317. நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே.
அடிவரவு: கண்ணார் கொந்து குன்று கான் வேடு கல் கோல் வாராகம் பூவார் நல்லன்பு-கவளம்
எட்டாந் திருமொழி
8. கவளயானை
திருப்பார்த்தன் பள்ளி
வருணனது வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீமந் நாராயணன் பார்த்தசாரதி திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இடம் இது. அதனால் இந்தத் திவ்விய தேசத்திற்குப் பார்த்தன் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூருக்குச் செல்வோர் சீர்காழி பூம்புகார்ச் சாலையில் இறங்கிச் செல்லவேண்டும். பெருமாள் தாமரையாள் கேள்வன்.
ஆழ்வார் தம்மை நாயகியாக அமைத்துக்கொண்டு, திருமாலினிடத்தே ஈடுபட்ட தம் செயல்களைக் கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் போல் ஈண்டுப் பாடியுள்ளார்.
நற்றாய் இரங்கல்
கலி விருத்தம்
என் மகள் பார்த்தன்பள்ளியையே பாடுவாள்
1318. கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்
குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,
தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,
பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
கண்ணனின் செயல்களையே என் மகள் பாடுவாள்
1319. கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,
வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,
செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
என் மகளின் பாடல்களே மாறிவிட்டன
1320. அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு
செண்ட னென்றும், நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும்,
வண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி,
பண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
இலங்கை யழித்த மாயனை என்மகள் பாடுவாள்
1321. கொல்லை யானாள் பரிசழிந்தாள் கோல்வ ளையார் தம்முகப்பே,
மல்லை முன்னீர் தட்டிலங்கை கட்ட ழித்த மாயனென்றும்,
செல்வம் மல்கு மறையோர்நாங்கை தேவ தேவ னென்றென்றோதி,
பல்வ ளையா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே!
இராமன் வீரத்தையே என் மகள் பாடுவாள்
1322. அரக்க ராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,
குரக்க ரசனென் றும்கோல வில்லி யென்றும், மாமதியை
நெருக்கு மாட நீடுநாங்கை நின்ம லன்தா னென்றென்றோதி,
பரக்க ழிந்தா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே!
பார்த்தன்பள்ளிப் பரமனையே என் மகள் பாடுவாள்
1323. ஞால முற்று முண்டுமிழிந்த நாத னென்றும், நானி லஞ்சூழ்
வேலையன்ன கோலமேனி வண்ண னென்றும், மேலெழுந்து
சேலு களும்வயல் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
நாங்கைத் தேவதேவனை என் மகள் பாடுவாள்
1324. நாடி யென்றனுள் ளொங்கொண்ட நாத னென்றும், நான்மறைகள்
தேடி யென்றும் காணமாட்டாச் செல்வ னென்றும்,சிறை கொள்வண்டு
சேடு லவுபொழில் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாட கம்சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
சக்கரக்கையனையே பாடுவாள் என் மகள்
1325. உலக மேத்து மொருவனென்றும் ஒண்சு டரோடும் பரெய்தா,
நிலவு மாழிப் படையனென்றும் நேச னென்றும், தென்திசைக்குத்
திலத மன்ன மறையோர்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பலரு மேச வென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே!
பார்த்தன்பள்ளிப் பெருமானையே பாடுவாள் என் மகள்
1326. கண்ண னென்றும் வானவர்கள் காத லித்துமலர் கள்தூவும்,
எண்ண னென்று மின்பனென்றும் ஏழு லுகுக் காதியென்றும்,
திண்ண மாட நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பண்ணி னன்ன மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
வைகுந்தம் இன்பம் பெறுவர்
1327. பாருள் நல்லமறை யோர்நாங்கைப் பார்த்தன் பள்ளிசெங் கண்மாலை,
வார்கொள் நல்ல முலைமடவாள் பாடலைந் தாய் மொழிந்தமாற்றம்,
கூர்கொள் நல்ல வேல்கலியன் கூறு தமிழ் பத்தும்வல்லார்,
ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளு மெய்துவாரே!
அடிவரவு: கவளம் கஞ்சன் அண்டர் கொல்லை அரக்கர் ஞாலம் நாடி உலகம் கண்ணன் பாருள்-நும்மை
ஒன்பதாந் திருமொழி
9. நும்மைத் தொழுதோம்
திருவிந்தளுர்
இவ்வூரைத் திருவழுந்தூர் என்றும் கூறுவர். இது மாயவரத்தின் அருகில் உள்ளது. இங்கு ஸ்ரீரங்கநாதர் ஆதிசேஷன் பள்ளி கொண்டிருக்கிறார். இவரைப் பரிமளரங்கன் என்று கூறுவர். இவ்வூருக்குச் சுகந்தவனம் என்று வடமொழியில் பெயர் உண்டு. காவிரிக் கரையில் அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் திவ்விய தேசங்களுள் இது கீழ்க் கோடியில் இருக்கிறது. திருமங்கையாழ்வார் இவரைச் சேவிக்க வந்தார். அப்போது கோவில் காலம் முடிந்துவிட்டபடியால் சன்னதிக் கதவு மூடப்பட்டது. பகவானைச் சேவிக்கமுடியவில்லையே என்று துடித்த ஆழ்வார், வாழ்ந்தே போம் நீரே என்று பகவானைக் கூறிய இடம் இவ்வூர்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவிந்தளூர்ப் பெருமானே! எம்மைக் காப்பாற்று
1328. நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,
இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,
எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,
நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே?
இந்தளூராய்! இரக்கம் காட்டு
1329. சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா, அந்த ணாலி மாலே சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ,என்
எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே.
அயலார் ஏசுகின்றனர்: அருள் செய்வாய்
1330. பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,
மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்
ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்
ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே.
எம்பெருமானே! நீரே வாழ்ந்து போம்
1331. ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,
காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே.
எங்களுக்கு நீரே பெருமான்!
1332. தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய்,எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.
எல்லோரையும் போல் என்னையும் நினையாதீர்!
1333. சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,
எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,
நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,
எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே.
பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள்
1334. மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா
விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே,
காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த,
நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே
தங்கள் வண்ணத்தைக் காட்டக்கூடாதா?
1335. முன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!
எந்தையே! திருமேனி வண்ணத்தைக் காட்டுங்கள்
1336. எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,
இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே!
அமரர்க்கும் அமரராவர்
1337. ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை,
காரார் புறவின் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த,
சீராரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து,
ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே.
அடிவரவு: நும்மை சிந்தை பேசு ஆசை தீயெம் சொல்லா மாட்டீர் முன்னை எந்தை ஏரார்-ஆய்ச்சியர்.
பத்தாந் திருமொழி
10. ஆய்ச்சியர்
திருவெள்ளியங்குடி
இவ்வூர் மாயவரம்-கும்பகோணம் பிரிவில் அணைக்கரைக்கு ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. திருவிந்தளூரில் பெருமாள் சேவை கிடைக்காமையால் வருந்திய ஆழ்வாரை இவ்வூர்ப் பெருமாள் அழைத்துத் தரிசனம் தந்தருளினார்.
1338. ஆய்ச்சியரழைப்பவெண்ணெயுண்டடொருகால்ஆலிலைவளர்ந்தவெம்பெருமான்
பேய்ச்சியழலையுண்டிணைமருதிறுத்துப் பெருநிலமளந்தவன்கோயில்
காய்த்தநீள் கழகுங்கதலியுந்தெங்கும் எங்குமாம் பொழில்களினடுவே
வாய்த்தநீர்பாயும்மண்ணியின் தென்பால் திருவெள்ளியங்குடியதுவே.
கண்ணன் கருதிய கோயில் இது
1339. ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டு அரக்கர்தம் சிரங்களை யுருட்டி,
கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில்,
பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி,
தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே.
காளியன்மேல் நடனமாடியவன் வாழ்விடம் இது
1340. கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்
படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில்,
படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய்,
அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே.
காளமேகன் கருதும் கோயில் இது
1341. கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன்,
பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்,
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்,
செறிமணி மாடக் கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே.
பார்த்தசாரதியாய் இருந்தவன் இருக்கும் இடம் இது
1342. பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து, ஒருகால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில்,
ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென் றெண்ணி,
சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே.
கோலவில்லிராமன் கோயில் இது
1343. காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை,
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்கோயில்,
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,
சேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே!
திருவிக்கிரமன் கோயில் இது
1344. ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு,
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே!
நரசிங்கப்பெருமான் வாழ்விடம் இது
1345. முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை,அன் றரியாய்
மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்,
படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால்,
விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே.
ஆழியான் அமரும் கோயில் இது
1346. குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த
அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில்,
கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய,
வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே!
இவ்வுலகை ஆள்வர்
1347. பண்டுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு,
தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை,
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே.
அடிவரவு: ஆய்ச்சியர் ஆநிரை கடுகற வை பார் காற்று ஒள்ளிய முடி குடி பண்டு-அறிவது.
***************
ஐந்தாம் பத்து
முதல் திருமொழி
1. அறிவது
திருப்புள்ளம்பூதங்குடி
பெரிய வுடையாருக்கு (ஜடாயுவுக்கு) மோட்சம் கொடுத்த நிலையில் பெருமாள் வல்விலிராமன் ஈண்டு முனிவர்களுக்குக் காட்சி தருகிறார். தாயார் பொற்றாமரையாள். பறவையைக் குறிக்கும் புள் என்ற சொல்லைத் தாங்கி நிற்கும் திவ்வியதேசம் இது. இவ்வூர் கும்பகோணம்-திருவையாறு சாலைக்கு அருகில் இருக்கிறது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வாமனன் வாழும் இடம் திருப்புள்ளம்பூதங்குடி
1348. அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே!
யானையின் துயர் தீர்த்தவன் வாழும் இடம்
1349. கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!
மருதம் சாய்த்த மால் மருவும் இடம்
1350. மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து,
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்,
காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்,
பூவார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே!
வல்வில் இராமன் வாழும் இடம்
1351. வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன்,
வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம்,
கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்,
பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே!
மாயன் மன்னும் இடம்
1352. மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே!
ஏழு எருதுகளை அடக்கியவன் எழுந்தருளிய இடம்
1353. மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,
மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம்,
மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட,
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே.
வாணன் தோள் துணித்தவன் வாழும் இடம்
1354. குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே.
அருச்சுனனின் தேரை ஓட்டியவன் அமரும் இடம்
1355. கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம்,
மறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே.
அருமறைகள் அருளியவன் அமரும் இடம்
1356. துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே,
துயர்நள் விலகிவிடும்
1357. கற்றா மறித்து காளியன்றன் சென்னி நடுங்க நடம்பயின்ற
பொற்றா மரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி,
சொல்தானீரைந் திவைபாடச் சோர நில்லா துயர்தாமே!
அடிவரவு: அறிவது கள்ளம் மேவா வெற்பால் மையார் மின்னின் குடை கறை துன்னி கற்றா-தாந்தம்
இரண்டாந் திருமொழி
2. தாந்தம்
திருக்கூடலூர்
இவ்வூருக்கு ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்று பெயர். தேவர்கள் கூட்டமாகக் கூடி பகவானைஇந்த எம்பெருமானை. வணங்கி வாழ்த்திய இடமாதலால் இவ்வூருக்குக் கூடலூர் என்று பெயர். இங்கிருக்கும் பெருமாளுக்கு வையம் காத்த பெருமாள் என்று பெயர். இவ்வூர் திருவையாற்றுக்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது.
கலி விருத்தம்
பாண்டவதூதர் பயிலும் ஊர் கூடலூர்
1358. தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே.
நப்பின்னை நாயகர் தங்கும் ஊர்
1359. செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம்தே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே!
அடியேனுள்ளம் புகுந்தவர் ஊர் இது
1360. பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே!
குறளுருவாய பெருமான் வாழும் ஊர்
1361. கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,
சேற்றே ருழுவர் கோதைப் போதூண்,
கோல்தேன் முரலும் கூட லூரே!
தொண்டர் பரவும் அடிகள் அமரும் ஊர்
1362. தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,
அண்டத் தமரும் அடிக ளூர்போல்,
வண்ட லலையுள் கெண்டை மிளிர,
கொண்ட லதிரும் கூட லூரே.
சிவனுக்குத் துணைவர் தங்கும் ஊர்
1363. தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே!
உலகமுண்டான் உறையும் இடம்
1364. கருந்தண் கடலும் மலையு முலகும்,
அருந்தும் அடிகள் அமரு மூர்போல்,
பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,
குருந்தம் தழுவும் கூட லூரே!
திருநீர்மலைப் பெருமான் வாழும் இடம்
1365. கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று,
இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே!
என் உள்ளம் புகுந்தவன் எழுந்தருளிய ஊர்
1366. பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே.
பாவம் பறந்து போய்விடும்
1367. காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே.
அடிவரவு: தாம் செறும் பிள்ளை கூற்றேர் தொண்டர் தக்கன் கருந்தண் கலை பெருகு காவி-வென்றி.
மூன்றாந் திருமொழி
3. திருவெள்ளரை
இவ்வூருக்கு வட மொழியில் ச்வேதகிரி என்று பெயர். இது வெண்மையான பாறைகளால் இயன்ற மலை. சன்னதி, மலையின்மீது ஒரு கோட்டைபோல் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் முடி உத்தராயண வாசலும், ஆடி முதல் மார்கழி தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும் இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு புண்டரீகாட்சன் என்பது திருநாமம். திருச்சியிலிருந்து கோயிலடி பேருந்துவண்டியில் சென்று இவ்வூருக்குப் போகவேண்டும். கோயிலைச் சுற்றி நாற்புறுமும் காவிரி செல்கிறது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவெள்ளறையானே! என்னை பக்தனாக்கு
1368. வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே,
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி,
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே!
ஹயக்ரீவனாக அவதரித்தவனே! அருள்செய்
1369. வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே!
நரசிம்மப் பெருமானே! அருள் புரிவாய்
1370. வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே!
திருவேங்கடமுடையானே! திருவருள் தா
1371. வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த,
காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு,
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த,
தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு வெள்ளறை நின்றானே!
வராகப்பெருமானே! எனக்கு அருள் செய்
1372. மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னேஎனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே.
தேவர்கட்கு அமுதளித்தவனே! என்னை ஆட்கொள்
1373. பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதிநின் அடிமை யையரு ளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழல ணைவான்,
திங்கள் தோய்சென்னி மாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே!
இராவணனை அழித்தவனே! எனக்கு அருள் புரி
1374. ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ னேஎனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல திருவெள்ளறை நின்றானே!
வேதங்களைத் தோற்றுவித்தவனே! அருள் காட்டு
1375. முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றருமறை பயந்தவ னேஎனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே!
திரிவிக்கிரமனே! எனக்கு அருள் செய்
1376. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரமநிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே.
இவற்றைப் பாடுவோர் தேவர்க்கு அரசராவர்
1377. மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே.
அடிவரவு: வென்றி வசை வெய்ய வாம்பரி மானவேல் பொங்கு ஆறு முன் ஆங்கு மஞ்சு-உந்திமேல்
நான்காந் திருமொழி
4. உந்திமேல்
திருவரங்கம்-1
திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் என்று கூறுவது வழக்கம். பூலோக வைகுண்டம் என்று இதைக் கூறுவார்கள். ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயில் என்றே இதனைச் சிறப்பித்துச் சொல்வார்கள். காவிரி நதிக்கு இடையில் இத்தலம் இருக்கிறது. பெருமாள் ஸ்ரீரங்கநாதர். தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பெருமாள் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு இருக்கிறார். இவருக்குப் பதின்மர் பாடும் பெருமாள் என்றும் ஒரு பெருமை உண்டு.
கலிநிலைத்துறை
பிரமனைப் படைத்தவனது இடம் திருவரங்கம்
1378. உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே!
ஆலிலையில் பள்ளிகொண்ட மாயனது இடம்
1379. வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே!
உலகளந்தவன் உறையும் இடம்
1380. பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.
வில்லால் இலங்கையழித்த பிரானின் இடம்
1381. விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே,
இராமபிரான் இருக்கும் இடம்
1382. வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும்,நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.
பேய்ச்சி பாலுண்டபிரான் தங்கும் இடம்
1383. கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே
கஞ்சனையும் மல்லரையும் அழித்தவன் அமருமிடம்
1384. கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே,
தசாவதாரம் எடுத்தவன் தங்கும் இடம்
1385. ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே,
யாராலும் அறியமுடியாதவன் அமருமிடம்
1386. சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய, இம்
மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே,
மண்ணும் விண்ணும் ஆள்வர்
1387. அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே.
அடிவரவு: உந்திமேல் வையம் பண்டு விளைத்த வம்பு கலை கஞ்சன் ஏனம் சேயன் அல்லி-வெருவாதாள்
ஐந்தாந் திருமொழி
5. வெருவாதாள்
திருவரங்கம்-2
பரகாலநாயகியாகிய திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதராகிய நாயகரது பிரிவால் வருந்துவதாகவும், அது கண்டு அவரது தாய் இரங்கிக் கூறுவதாகவும் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.
தலைவியின் நிலைகண்டு தாய் இரங்கிக் கூறுதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மணிவண்ணன் என் மகளை மாற்றிவிட்டானே!
1388. வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே.
என் மகள் புலம்புமாறு செய்துவிட்டானே மாயன்!
1389. கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான்,
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ? என்னும், மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே .
என் மகளைப் பித்தாக்கிவிட்டானே கண்ணன்!
1390. மானாய மென்னோக்கி வாநெடுங் கண்ணீர்மல்கும் வளையும் சோரும்,
தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின்,
கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன், என் மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே. .
மாமாயன் என் மகளை மயக்கிவிட்டானே!
1391. தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை
யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கி லேனே.
ஆய்ப்பாடி நம்பி என் மகளை எப்படி மாற்றிவிட்டான்!
1392. பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள்,
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்,
நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே,
மதுசூதன் என் மகளை என்னவெல்லாம் செய்துவிட்டான்!
1393. தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லுகேனே.
என் மகளது குணத்தை மாற்றிவிட்டானே மாயன்!
1394. வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள்,எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான்,
தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன்,
என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே.
என் மகள் மாயவன் பெயரையே கூறுகின்றாள்
1395. உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால்,
மறவாதே யெப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின் றளால்,
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன், என்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே.
அரங்கன் வந்தானா என்கின்றாள்
1396. பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,
அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே,
இவற்றைப் படிப்போர் பொன்னுலகில் வாழ்வர்
1397. சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே.
அடிவரவு: வெருவாதாள் கலை மான் தாய் பூண் தாதாடு வாராளும் உறவு பந்தோடு சேல்-கைம்மானம்.
ஆறாந் திருமொழி
6. கைம்மானம்
திருவரங்கம்-3
திருவரங்கனின் பெருமைகளையெல்லாம் ஈண்டு விளக்குகிறார் ஆழ்வார்.
கலி விருத்தம்
திருமாலைத் தென்னரங்கத்தில் கண்டேன்
1398. கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை,
மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த
வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே,
உலகேழும் உண்டவனை அரங்கத்தில் கண்டேன்
1399. பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே,
அடியார் மனத்தில் இருப்பவன் அரங்கன்
1400. ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே,
இரணியனை அழித்தவன் இடம் அரங்கம்
1401. வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,
யாகங்களில் அவியுணவை உண்பவன் இடம்
1402. நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே,
கம்சனைக் கொன்றவன் அரங்கன்
1403. தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே,
என் உள்ளத்தே உறைபவன் அரங்கன்
1404. சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,
யாவர்க்கும் பிரான் அரங்கன்
1405. துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே.
மெய்யர்க்கு மெய்யன் அரங்கன்
1406. பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே.
இவற்றைப் பாராயணம் செய்க; தீவினை தீரும்
1407. ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே.
அடிவரவு: கைம்மானம் பேரானை ஏனாகி வளர்ந்த நீர் தம் சிந்தனை துவரித்த பொய் ஆமருவி-பண்டை.
ஏழாந் திருமொழி
7. பண்டை
திருவரங்கம்-4
ஈண்டுள்ள பாசுரங்களும் திருவரங்கனின் பெருமைகளைக் கூறுகின்றன.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
எல்லாமாய் இருப்பவன் திருவரங்கன்
1408. பண்டைநால் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும்,
கொண்டல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே.
உயிர்களுக்கு வாழ்வு அளிப்பவன் திருவரங்கன்
1409. இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும்,பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே.
அன்னமாகி அருமறை அளித்தவன் அரங்கன்
1410. மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே,
அலைகடல் கடைந்தவன் அரங்கன்
1411. மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர,
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப,
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே,
நரசிம்மனாகத் தோன்றியவன் அரங்கன்
1412. எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம்,
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து பொழிதரு மருவியொத் திழிய,
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,
அங்ஙனே யொக்க அரியுரு வானான் அரங்கமா நகரமர்ந் தானே,
பாற்கடலில் பள்ளிகொண்டவன் அரங்கன்
1413. ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள்,
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய,
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே,
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே.
கடலில் அணை கட்டியவன் அரங்கன்
1414. சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன்,
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,
வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட, மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
அருச்சுனனுக்கு அருளியவன் அரங்கன்
1415. ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் உலகில்
சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட, பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
மலையைக் குடையாகப் பிடித்தவன் அரங்கன்
1416. பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென் சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
பழவினைகள் அகலும்
1417. பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமா நகரமர்ந் தானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேற் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே.
அடிவரவு: பண்டை இந்திரன் மன்னு மாயிரு எங்ஙனே ஆயிரம் சுரி ஊழி பேய் பொன்-ஏழை.
எட்டாந் திருமொழி
8. ஏழை ஏதலன்
திருவரங்கம்-5
குகன், அனுமன், கஜேந்திரன், சுமுகன்,கோவிந்தசுவாமி மார்க்கண்டேயன், ஸாந்தீபினி, வைதிகன், தொண்டை மன்னன் ஆகியோர் தேவரீருடைய திருவருளுக்கு இலக்கானது போல் அடியேனும் ஆகவேண்டும் என்று ஆழ்வார் அரங்கனிடம் வேண்டுகிறார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குகனைத் தோழமை கொண்டவன் அரங்கன்
1418. ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.
சாதி வேற்றுமை பாராட்டாதவன் அரங்கன்
1419. வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று
கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.
கஜேந்திரனைக் காப்பாற்றியவன் அரங்கன்
1420. கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்,
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப
கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்
அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
சுமுகன் என்ற நாககுமாரனைக் காத்தவன்
1421. நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுளஅதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
கோவிந்தஸ்வாமி என்ற அந்தணனுக்கு அருள் செய்தவன்
1422. மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன்,
தோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமை யிலத்தவிங் கொழிந்து
போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவன்
1423. மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்
தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
சாந்தீபினிக்கு அருள் புரிந்தவன்
1424. ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,
காத லென்மகன் புகலிடங் காணேன், கண்டு நீதரு வாயெனக் கென்று,
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
அரங்கனே! எனக்கும் அருள் செய்
1425. வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி,
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
தொண்டை மன்னனுக்குத் திருமந்தரம் உபதேசித்தவன்
1426. துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.
இவற்றைப் பாடுங்கள்; பாவம் பறந்தவிடும்
1427. மாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,
ஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,
நீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்! பாடநூல் பும்மிடைப் பாவம்நில் லாவே.
அடிவரவு: ஏழை வாத கடி நஞ்சு மாக மன்னு ஓது வேத துளங்கு மாட-கையிலங்கு
ஒன்பதாந் திருமொழி
9. கையிலங்கு
திருப்பேர் நகர்
திருப்பேர்நகர் ஒரு திவ்விய தேசம். இதற்கு அப்பக்குடத்தான் சன்னிதி என்று பெயர். கோவிலடி என்றும் இதனைக் கூறுவர். அப்பக்குடத்தானை ஆழ்வார் அகங்கனிந்து பாடுகிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பரமனைப் பாடி நான் உய்ந்தேன்
1428. கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன்,
பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும்,
செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே,
திருமாலைத் துதித்து நான் உய்ந்தேன்
1429. வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே,
திருப்பேர் நகரை நினைந்து நான் உய்ந்தேன்
1430. ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால்,
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள், என்று விட்டான்,
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல்
கருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே,
அப்பக் குடத்தானை வாழ்த்தி நான் உய்ந்தேன்
1431. ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே,
நரசிங்கனின் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்
1432. வக்கரன் வாய்முன் கீண்ட மாயவனே என்று வானேர்
புக்கு, அரண் தந்த ருள்வாய், என்னப்பொன் னாகத் தானை,
நக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த,
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே,
திருப்பேர்நகர் சேர்ந்து நான் வாழ்ந்தேன்
1433. விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு, வில்லால்,
இலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான்,
நலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே,
கண்ணனின் பெயரையே சொல்லி உய்ந்தேன்
1434. வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே,
நாள்தோறும் கண்ணனையே துதிப்பேன்
1435. அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே,
என் சிந்தையில் வாழ்பவன் திருப்பேரூரான்
1436. நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே,
தேவர் உலகு கிடைக்கும்
1437. வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே,
அடிவரவு: கையிலங்கு வங்கம் ஒருவனை ஊன் வக்கரன் விலங்கல் வெண்ணெய் அம்பொன் நால் வண்டு-தீதறு
பத்தாந் திருமொழி
10. தீதறு
திருநந்திபுர விண்ணகரம்
கும்பகோணத்திற்குத் தென்மேற்கே சுமார் மூன்று மைல் தொலைவிலுள்ளது இந்தத் திவ்விய தேசம். இதற்கு நாதன் கோவில் என்றும் பெயர். இங்குள்ள பெருமாளுக்கு ஜகந்நாதன் என்பது திருநாமம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தயிருண்டநாதன் ஊர் நந்திபுர விண்ணகரம்
1438. தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி சும்பு மவையாய்,
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை யாய பெருமான்,
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட மார்வர் தகைசேர்,
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
உலகேழும் உண்டவன் உறையும் ஊர்
1439. உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி யாமை முனநாள்,
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன் மேவு நகர்தான்,
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர் கிண்டி யதன்மேல்,
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
மனமே! நந்திபுர விண்ணகரம் சேர்
1440. உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி யாமை முனநாள்,
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட மார்வர் தகைசேர்,
வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ்,
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
அசுரர்களை அழித்தவன் அமரும் இடம் இது
1441. பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயிலமலர்களுக அளிமுரல அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
பஞ்சாயுதன் உறையும் இடம் இது
1442. மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி யாம ளவெய்தான்,
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே,
இராமன் இருக்கும் இடம் இது
1443. தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை யாக முனநாள்,
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான்,
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி லார்பு றவுசேர்,
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே,
நந்திவர்மன் பணி செய்த இடம் இது
1444. தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல் நந்தன் மதலை,
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ நின்ற நகர்தான்,
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள் ஆடுபொழில்சூழ்,
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
மனமே! நந்திபுர விண்ணகரே அடைவாய்
1445. எண்ணில்நினை வெய்தியினி யில்லை யிறை யென்றுமுனி யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள் தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
நந்திபுர விண்ணகரத்தானே நங்கள் பெருமான்
1446. வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி யார றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
இவற்றைப் பாடினால் வினைகள் அகலும்
1447. நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை யானை, ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை யைந்து மைந்தும்,
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள் முழுத கலுமே.
அடிவரவு: தீதறு உய்யும் உம்பர் பிறை மூள தம்பி தந்தை எண்ணில் வங்கம் நறைசெய்-வண்டு.
*********
ஆறாம் பத்து
முதல் திருமொழி
1. வண்டுணும்
திருவிண்ணகர்-1
இந்தத் திவ்வியதேசத்தை உப்பிலியப்பன் கோயில் என்று கூறுவார்கள். இதனைத் தளஸீவனம் என்றும் கூறுவர். இங்கு ஸ்ரீநிவாஸன் எழுந்தருளி இருக்கின்றார். இது பிரார்த்தனைத் தலம். இப்பெருமாள் இப்போதும் உப்பு இல்லாமல் தளிகைகளை அமுது செய்கிறார். இப்பெருமானுக்கு ஒப்பிலியப்பன் என்ற திருநாமமும் கூறப்படுகிறது. ஒப்பில்லாத அப்பனை ஒப்பிலியப்பன் என்று அழைப்பது எவ்வளவு பொருத்தமானது!
வஞ்சி விருத்தம்
மனைவாழ்க்கை வேண்டாம்; நின்னருள் தா
1448. வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு பண்டைநம் வினைகெட வென்று,அடிமேல்
தொண்டரு மமரும் பணியநின்று அங்கண்டமொ டகலிட மளந்தவனே
ஆண்டாயுனைக் கான்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
திருமகள் கணவனே! திருவருள் தா
1449. அண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே
விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்டவெம் பெருமானே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
நீலமேனியனே! நின்னைக்காண அருள் செய்
1450. குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட தழல்நிற வண்ணன்நண் ணார்நகரம்
விழ நனி மலைசிலை வளைவுசெய்துஅங் கழல்நிற அம்பது வானவனே
ஆண்டாயுன்னைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
ஆலிலையில் கண்வளர்ந்தவனே! அருள் செய்
1451. நிலவொடு வெயில்நில விருசுடரும் உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுரு வினையாய் அலைகட லாலிலை வளர்ந்தவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே
திருவண்ணகரானே! திருவருள் தா
1452. பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,
ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்றுஅங் கோரெழுத் தோருரு வானவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
நான்மறைப் பொருளே! நல்லருள் நல்கு
1453. கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்கெழு முலகமு மாகி,முத
லார்களு மறிவரு நிலையினையாய்ச் சீர்கெழு நான்மறை யானவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
வேத ஒலியானவனே! அருள் காட்டு
1454. உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
பெண்ணாசை விடுத்தேன்; நின்னைக் காண அருள் செய்
1455. காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன் நான் போதலார் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
மும்மூர்த்தியானவனே; நின்னைக் காணவேண்டும்
1456. சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் காதல்செய் யாதுன கழலடைந்தேன்,
ஓதல்செய் நான்மறை யாகியும்பர் ஆதல்செய் மூவுரு வானவனே,
ஆண்டாய் உனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
திருமால் திருவடி சேர்வர்
1457. பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,
பாமரு தமிழிவை பாடவல்லார்,
வாமனன் அடியிணை மருவுவரே.
அடிவரவு: வண்டு அண்ணல் குழல் நிலவு பார் கார் உருக்குறு காதல் சாதலும் பூமரு-பொறுத்தேன்
இரண்டாந் திருமொழி
2. பொறுத்தேன்
ஈண்டு உள்ளனவும் திருவண்ணகர்ப் பாசுரங்களே. முன்பு ஆழ்வார் வேண்டேன் மனை வாழ்க்கையை என்றார். பகவான் ஒடி வந்து அருள் கொடுக்கவில்லை. என் குற்றங்களைப் பாராதே பிராட்டியைச் சேர்ந்தவன் எனக்கருதி என்னை ஏற்றுக் கொள் என்று அவர் ஈண்டு வேண்டுகிறார்.
கலிநிலைத்துறை
எல்லாவற்றையும் துறந்து நின்னை அடைந்தேன்
1458. பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும்
இறுத்தேன், ஐம்புலன் கட்கட னாயின வாயிலொட்டி அறுத்தேன்,
ஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன்,
நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
திருவிண்ணகரானே! நீயே சரணம்
1459. மறந்தே னுன்னைமுன்னம் மறந் தமதி யின்மனத்தால்,
இறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில்
பிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா
சிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.
மனத்திருந்த தேனே! உன்னையே சரணடைந்தேன்
1460. மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும்,
ஊனேராக்கை தன்னை உதவாமை யுணர்ந்துணர்ந்து,
வானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த தேனே,
நின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே.
பந்தபாசங்களை அகற்றி உன்னைச் சேர்ந்தேன்
1461. பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.
எதுவும் நிலையாது; எனவே நின்னைச் சேர்ந்தேன்
1462. பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப,
ஆண்டார் வையமெல் லாம் அர சாகி, முன்னாண்டவரே
மாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை வேண்டேன்,
நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
மல்லர்களை அடர்த்தவனே! சரணம்
1463. கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன்,
மல்லா, மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த மல்லா,
மல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த
வில்லா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
திருவிண்ணகரானே! நீயே சரணம்
1464. வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய்,
ஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி,
கூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை,
தேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
வானவர் தலைவா! யான் நின் அடைக்கலம்
1465. தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல்,
மேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார்,
மூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த
தேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
பாண்டவர் தூதா! என்னை ஏற்றுக்கொள்
1466. போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம்
கோதா, கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த
தூதா, தூமொழி யாய்.சுடர் போலென் மனத்திருந்த
வேதா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
தேவர் உலகு சேர்வர்
1467. தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை,
வானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன், மருவார்
ஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார்,
கோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே.
அடிவரவு: பொறுத்தேன் மறந்தேன் மானேய் பிறிந்தேன் பாண்டேன் கல்லா வேறா தீவாய் போதார் தேனார் துறப்பேன்
மூன்றாந் திருமொழி
3. துறப்பேன்
திருவிண்ணகர்-3
பரமபதத்திற்கு வந்து, திருத்தொண்டு செய்யும் வாழ்வைத் தமக்கு அளிக்குமாறு திருவிண்ணகர்ப் பெருமாளை ஈண்டு ஆழ்வார் வேண்டுகிறார்.
கலிநிலைத்துறை
திருவிண்ணகரானே! நின்னுருவத்தை மறவேன்
1468. துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம்
மறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில்
பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது,நின்
திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே.
திருமாலே! நான் உனக்கு அடிமை
1469. துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால்,
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே,
அறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே,
திறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே.
திருநறையூர்த்தேனே! நின்னை அடைந்தேன்
1470. மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும்,
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன்,
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே, வருபுனல்சூழ் திருவிண் ணகரானே.
உன்னைச் சேர்ந்து என் தீவினைகளைப் போக்கினேன்
1471. சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத்
தாழ்ந்தேன், அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன்,
போந்தேன், புண்ணியனே. உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே.
நின்னை நினைந்து பிறவாமை பெற்றேன்
1472. மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப்
பெற்றேன், பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான்,
வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச்
செற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே
திருவிண்ணகரானே! பிழைக்கும் கை உணர்ந்தேன்
1473. மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்,
செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே உண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே.
திருவிண்ணகரானே! நீயே என் தெய்வம்
1474. வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு
மாறே, நீபணியா தடைநின் திருமனத்து,
கூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு மற் றோர்தெய்வம்
தேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே.
நான் பரமபதம் அடைவது எப்பொழுது?
1475. முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால்,
விளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா, லடியேற்க்கு, வானுலகம்
தெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே.
நம்பீ! என் தீவினைகளை நீக்கு
1476. சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட
நல்லே னை வினைகள் நலியாமை நம்புநம்பீ,
மல்லாகுடமாடி. மதுசூத னே உலகில் செல்லா
நல்லிசையாய் திருவிண் ணகரானே.
துன்பம் நீங்கிவிடும்
1477. தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில்,
சீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை
காரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை,
ஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே.
அடிவரவு: துறப்பேன் துறந்தேன் மானேய் சாந்து மற்றோர் மை வேறே முளிந்து சொல் தாரார்-கண்ணும்
நான்காந் திருமொழி
4. கண்ணும் சுழன்று
திருநறையூர்-1
பரமபதம் செல்ல விரும்பிய திருமங்கையாழ்வாருக்குப் பகவான் திருநறையூரின் சிறப்பைப் பாரும். இதைவிடப் பரமபதத்தில் என்ன இருக்கிறது? என்று கூறினார் போலும்! திருநறையூரின் பெருமை ஈண்டுப் பாடப்பட்டுள்ளது. திருநறையூருக்கு நாச்சியார்கோயில் என்று பெயர். நீளாதேவிக்குச் சிறப்பைத் தருகிறது இவ்வூர்.
கலிநிலைத்துறை
கிழப்பருவம் வருமுன் திருநறையூர் தொழுக
1478. கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால்,
பண்ணின் மொழியார் பைய நடமின் என் னாதமுன்,
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியு மாயினான்,
நண்ணு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
மனமே! விரைவில் திருநறையூர் தொழு
1479. கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து, நீர்
இங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன்,
திங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
முதுமை கண்டு பலர் சிரிப்பர்; விரைவில் தொழு
1480. கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து, எம்மை
எங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன்
செங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர்,
நங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
நறையூர் நம்பனை இப்பொழுதே தொழு
1481. கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை,
வம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன்,
செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
மனமே! விலைமகளிர் இகழுமுன் நறையூர் தொழு
1482. விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண்
சலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக ழாதமுன்,
மலங்கும் வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு,
நலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
மனமே! தாமதியாமல் நறையூர் தொழு
1483. மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து,
என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன்,
தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான்,
நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
பிறர் பரிகாசஞ் செய்யுமுன் நறையூர் தொழு
1484. வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து, இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன்,
சொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர்,
நல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
நரை திரை மூப்பு வருமுன் நறையூர் தொழு
1485. வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை,
கேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
நெஞ்சே! உடனே நறையூர் தொழு
1486. கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட,
குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன்,
பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம்,
நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
இவற்றைப் படிப்போர் தேவர்க்கு அரசாவர்
1487. பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன்,
நறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற,
கறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல்,
மறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே.
அடிவரவு: கண்ணும் கொங்குண் கொங்கார் கொம்பு விலங்கு மின் வில் வாள் கனி பிறை-கலங்க
ஐந்தாந் திருமொழி
5. கலங்க
திருநிறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியையே ஆழ்வார் ஈண்டும் பாடுகிறார்.
கலிநிலைத்துறை
கடல் கடைந்தவன் ஊர் திருநறையூர்
1488. கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு, இமையோர்
துலங்கல் தீர நல்கு சோதிச் சுடராய,
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்,
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே.
நரசிங்கமாக அவதரித்தவன் ஊர் இது
1489. முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம்,
புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில்கூவும்,
நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே.
இலங்கையைச் செற்றவன் இருப்பிடம் நறையூர்
1490. ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட,
சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர்,
மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து,
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே.
உரலில் கட்டுண்டவன் உறைவிடம் நறையூர்
1491. உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு,
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர்,
பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட,
நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே.
மருத மரங்களை முறித்தவன் மன்னும் ஊர் நறையூர்
1492. விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய்,
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர்,
பெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று
நடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே.
பேய்ச்சி பாலுண்டவன் தங்கும் ஊர் நறையூர்
1493. பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு,
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்,
நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே.
சாந்தீபினிக்கு அருள்செய்தவன் அமரும் ஊர் இது
1494. முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த,
அந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர்,
பொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி,
நந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே.
பார்த்தன் தேரூர்ந்தவன் வாழும் இடம் நறையூர்
1495. வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம்
விள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர்,
கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும்,
நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே.
தேவதேவன் சேரும் ஊர் நறையூர்
1496. பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன்தன்
தேரை யூரும் தேவ தேவன் சேருமூர்,
தாரை யூரும் தண்தளிர் வேலிபுடைசூழ,
நாரை யூரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே.
திருமாலின் துணை கிடைக்கும்
1497. தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற
நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை,
சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே.
அடிவரவு: கலங்க முனை ஆனை உறி விடை பகுவாய் முந்து வெள்ளை பாரை தாமம்-அம்பரமும்.
ஆறாந் திருமொழி
6. அம்பரமும்
திருநறையூர்-3
திருநறையூர் சேர்ந்து திருமாலின் திருவருவைப் பெறுமாறு ஆழ்வார் ஈண்டு எல்லோரையும் வேண்டுகிறார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பக்தர்களே! திருநறையூர் சேருங்கள்
1498. அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
ஊழி முதல்வன் உறைவிடம் நறையூர்
1499. கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,
எழுந்தினிது விளையாடு மீச னெந்தை இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும்
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
திருவிக்கிரமன் திருநறையூரில் உள்ளான்
1500. பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
நரசிங்கனது நறையூரை நண்ணுங்கள்
1501. பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம் அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
சோழன் பூசித்த நறையூர் சேருங்கள்
1502. அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர் அரியுருவா யிரணியன தாகங்கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம்பரந்து நிலம்பரக்கும்பொன்னிநாடன்,
தென் தமிழின், வட புலக்கோன்சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பக்தர்களே! உடனே திருநறையூர் சேருங்கள்
1503. தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,
தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த் தானாய னாயினான் சரணென்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
நறையூரில் கண்ணன் கழலிணை சேரலாம்
1504. முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே
இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர் இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்
மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பக்தர்கட்கு ஏற்ற இடம் திருநறையூர்தான்
1505. முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
திருநறையூரில் திருமால் அருள் கிடைக்கும்
1506. தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
விண்ணோர்க்கு விருந்தாவர்
1507. செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை
பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன் புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த
அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார்பாடி
வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே.
அடிவரவு: அம்பரமும் கொழு பவ்வம் பைங்கண் அன்று தன்னாலே முலை முருக்கு தாராளன் செம்மொழி-ஆளும்.
ஏழாந் திருமொழி
7. ஆளும் பணியும்
திருநறையூர்-4
திருநறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியின் பெருமைகளை இங்கே ஆழ்வார் பாடியுள்ளார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நறையூர் நம்பிதான் இராமபிரான்
1508. ஆளும் பணியு மடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயு மனையாரும் வேற்க ணாரும் பயில்வீதி
நாளும் விழவி னொலியோவா நறையூர் நின்ற நம்பியே.
நறையூர் நம்பிதான் பரசுராமன்
1509. முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்ன ருடல்துணிய
தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப் பான லொருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
நறையூர் நம்பிதான் வாமனன்
1510. தெள்ளார் கடல்வாய் விடவாய சினவா ளரவில் துயிலமர்ந்து
துள்ளா வருமான் விழவாளி துரந்தா னிரந்தான் மாவலிமண்
புள்ளார் புறவில் பூங்காவி புலங்கொள் மாதர் கண்காட்ட
நள்ளார் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
நறையூர் நம்பிதான் கண்ணபிரான்
1511. ஓளியா வெண்ணெ யுண்டானென் றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் மென்மலர்மேல்
களியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர்தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே.
நறையூர் நம்பிதான் கம்சனைக் கொன்றவன்
1512. வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே.
நறையூர் நம்பிதான் வாணன் தோள்களைத் துணித்தவன்
1513. வள்ளி கொழுநன் முதலாய மக்க ளோடு முக்கண்ணான்
வெள்கி யோட விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்
பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி
நள்ளியூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே.
நறையூர் நம்பிதான் பார்த்தசாரதி
1514. மிடையா வந்த வேல்மன்னர் வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர் கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கைந்து வேள்வி யங்க மாறிசையேழ்
நடையா வல்ல அந்தணர்வாழ் நறையூர் நின்ற நம்பியே.
பாஞ்சாலியின் கூந்தலை முடித்தவன் இவனே
1515. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தா மரைமே லயனோடு சிவனு மனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே!
சிவபிரானின் குறை தீர்த்தவன் இவன்
1516. ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமே லணிந்து,
உடலம் நீறும் பூசி யேறூரும் இறையோன் சென்று குறையிரப்ப
மாறொன் றில்லா வாசநீர் வரைமார் வகலத் தளித்துகந்தான் நாறும்
பொழில்சூழ்ந் தழகாய நறையூர் நின்ற நம்பியே.
இவற்றைப் படித்தோரைத் தேவர்களும் வணங்குவர்
1517. நன்மை யுடைய மறையோர்வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக் கலிய னொலிசெய் தமிழ்மாலை
பன்னி யுலகில் பாடுவார் பாடு சார பழவினைகள்
மன்னி யுலகம் ஆண்டுபோய் வானோர் வணங்க வாழ்வாரே.
அடிவரவு: ஆளும் முனி தெள்ளார் ஒளி வில் வள்ளி மிடை பந்து ஆறு நன்மை-மான்
எட்டாந் திருமொழி
8. மான்கொண்ட
திருநறையூர்-5
திருநறையூர்த் திருமாலின் திவ்விய தரிசனம் கிடைக்கப் பெற்ற ஆழ்வார் மனமகிழ்ந்து பாடுகிறார்.
தரவு கொச்சகக் கலிப்பா
திருவேங்கடத்தானைத் திருநறையூரில் கண்டேன்
1518. மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்
1519. முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனா யமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே.
கருடவாகனனை நறையூரில் கண்டேன்
1520. தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே.
திருநீர்மலையானைத் திருநறையூரில் கண்டேன்
1521. ஈடா அரியாய் இரணியனை யூனிடந்த
சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே.
வில்வீரன் இராமனை நறையூரில் கண்டேன்
1522. கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்
வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த
வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக
நல்லனை நாடி நறையூரில் கண்டேனே.
யசோதை சிறுவனை நறையூரில் கண்டேன்
1523. உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே.
கிருஷ்ண பரமாத்மாவை நறையூரில் கண்டேன்
1524. கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.
பூபாரம் தீர்த்த கண்ணனைக் கண்டேன்
1525. மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்
பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை
நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே.
திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்
1526. பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே.
தேவர்க்கெல்லாம் தேவர் ஆவர்
1527. மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே.
அடிவரவு: மான் முந்நீர் தூவாய ஓடா கல் உம்பர் கட்டேறு மண் பொங்கு மன்னு-பெடை
ஒன்பதாந் திருமொழி
9. பெடையடர்த்த
திருநறையூர்-6
திருநறையூர்த் திருநம்பியின் திருவடிகளையே அடையும்படி நமது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுகிறார் ஆழ்வார்.
தரவு கொச்சகக் கலிப்பா
மனமே! நறையூர் நம்பியின் அடியினை சேர்
1528: பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்,
இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே!
மனமே! நறையூரில் இராமபிரான்தான் உள்ளான்
1529. கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி,
வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்
பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற
அழலாறும் சரந்துரந்தா னடியிணையே யடைநெஞ்சே!
மனமே! நறையூரில் கண்ணபிரான்தான் உள்ளான்
1530. சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய, கதலிகளின்
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல், மூவுலகோடு
அளைவெண்ணெ யுண்டான்ற னடயிணையே யடைநெஞ்சே!
மனமே! கோவர்த்தனனே நறையூரில் உள்ளான்
1531. துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்,
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த,
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடை நெஞ்சே!
நறையூரில் ஆழியான் அடியினை சேர்
1532. அதிற்குறடும் சந்தனமு மம்பொன்னும் மணிமுத்தும்,
மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
பகல்கரந்த சுடராழிப் படையான், இவ் வுலகேழும்
புகக்கரந்த திருவயிற்றின் பொன்னடியே யடைநெஞ்சே!
மனமே! திருமகள் மார்பன் திருவடிகளே சேர்
1533. பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிகோடும்,
மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை, திருமார்வில்
மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடை நெஞ்சே!
திருத்துழாய் முடியான் திருநறையூரில் உள்ளான்
1534. சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்
பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்
கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்,
தார்தழைத்த துழாய்முடியன் தளரடியே யடை நெஞ்சே!
மனமே! நறையூர் நம்பியின் நல்லடி நண்ணு
1535. குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்
தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி,
நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே!
மனமே! நறையூர் நம்பிதான் தேவதேவன்
1536. மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும்
நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநிறையூர்,
பிறையாரும் சடையானும் பிரமனுமன் தொழுதேத்த,
இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே!
தேவர்களாகி வாழ்வர்
1537. திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை,
வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்,
பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்,
விண்களகத் திமையரவாய் வீற்றிருந்து வாழ்வாரே
அடிவரவு: பெடை கழி சுளை துன்று அகில் பொன் சீர் குலை மறை-கிடந்த
***********
பத்தாந் திருமொழி
10. கிடந்த நம்பி
திருநறையூர்-7
நமோ நாராயணம் என்னும் திருப்பெயரையே சொல்லுமாறு திருநறையூர் ஆழ்வார் நமக்கெல்லாம் அறிவுரை கூறுகிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருமாலின் திருநாமம் நமோநாராயணம்
நமோ நாராயணம் என்னும் திருப்பெயரையே சொல்லுமாறு திருநறையூரில் ஆழ்வார் நமக்கெல்லாம் அறிவுரை கூறுகிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருமாலின் திருநாமம் நமோநாராயணம்
1538. கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
உலகளந்தான் திருப்பெயர் நமோநாராயணம்
1539. விடந்தா னுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள்,முன்
தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழ லாகி உலகை யீரடியால்
நடந்தா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
வெண்ணெயுண்டான் திருநாமம் நமோநாராயணம்
1540. பூணா தனலும் தறுகண் வேழம் மறுக வளைமருப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திருமார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர்வெண்ணெய்
நாணா துண்டான் நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
விபீடணனுக்கு நல்லவன் நாமம் நமோநாராயணம்
1541. கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்,
எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான், இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை, விபீடணற்கு
நல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
கோவர்த்தனன் திருநாமம் நமோநாராயணம்
1542. குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா வுண்ணக் கண்டான் நாமம் நமோநா ராயணமே!
நமோநாராயணம் என்றே சொல்லுங்கள்
1543. கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர்
மான மழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கென்றும்
தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரு முரைமின் நமோநா ராயணமே!
நமோநாராயணம் என்ற நாமம் மிக நல்லது
1544. நின்ற வரையும் கிடந்த கடலும் திசையு மிருநிலனும்
ஒன்று மொழியா வண்ண மெண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா வெடுத்த அடிக ளுடைய திருநாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோநா ராயணமே!
ஆநிறை காத்தவன் பெயர் நமோநாராயணம்
1545. கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே யெமக்கென்று
படுங்கால் நீயே சரணென் றாயர் அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோநா ராயணமே.
நமோநாராயணம் என்றால் வினைகள் நீங்கும்
1546. பொங்கு புணரிக் கடல்சூ ழாடை நிலமா மகள்மலர்மா
மங்கை பிரமன் சிவனிந் திரன்வா னவர்நா யகராய்
எங்க ளடிக ளிமையோர் தலைவ ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோநா ராயணமே.
இவற்றைப் பாடினால் பாவம் பறந்துவிடும்
1547. வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே.
அடிவரவு: கிடந்த விடம் பூண் கல் குடை கான நின்ற கடுங்கால் பொங்கு வாவி-கறவா