குற்றாலம் : குற்றாலம் அருவிகளில் புனித நீராட ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து புனித நீராடி செல்கின்றனர். கடந்த சில நாட்களாகவே குற்றாலம் வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே மெயின் அருவியில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். அருவியில் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்தாலும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி புனித நீராடும் நிலை ஏற்பட்டது. மெயின் அருவி கார் பார்க்கிங் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனங்கள் மிகுதியாக இருந்ததால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டது. பல வாகனங்கள் பூங்கா பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. குற்றாலநாதர் கோயிலிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது. மொத்தத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தால் குற்றாலம் திணறியது என்றால் அது மிகையல்ல.