பதிவு செய்த நாள்
19
டிச
2017
12:12
திருப்பதி: திருமலைக்கு வரும் தர்ம தரிசன பக்தர்களுக்கு, நேரம் ஒதுக்கீடும் சோதனை முயற்சி துவங்கப்பட்டு உள்ளது.திருமலையில் இதுவரை, 300 ரூபாய் விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட பக்தர்களுக்கு, நேர ஒதுக்கீடு முறையை அமல்படுத்தி, அவர்களுக்கு, இரண்டு மணி நேரத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்யும் திட்டத்தை, தேவஸ்தான நிர்வாகம் வழங்கி வந்தது.நேற்று முதல், தர்ம தரிசன பக்தர்களுக்கும், இத்திட்டம், சோதனை முயற்சியாக துவங்கப்பட்டுள்ளது. அதற்காக, திருமலையில் உள்ள, 20 இடங்களில், 117 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இங்கு 4,400 ஊழியர்கள், மூன்று ஷிப்டுகளில், 80 அதிகாரிகளின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
டோக்கன் வழங்கும் இடங்கள் : திருமலையில் உள்ள, மத்திய விசாரணை அலுவலகம், சப்தகிரி சத்திரம், கெளஸ்துபம் ஓய்வறை வளாகம், சன்னிதானம், ஆர்.டி.சி., பேருந்து நிலையம், பத்மாவதி நகர் டெபாசிட் திருப்பி செலுத்தும் மையம், ஏ.டி.சி, ஸ்ரீவாரகஸ்வாமி, அலிபிரியிலிருந்து திருமலைக்கு வரும், பாத யாத்திரை மார்கத்தில் உள்ள காலிகோபுரம், ஸ்ரீவாரிமெட்டு மார்கம், ஆழ்வார் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில், நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படுகிறது.
பெறும் முறை : தர்ம தரிசன டோக்கன்கள் பெற, பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டையுடன், மேலே குறிப்பிட்ட இடங்களில் உள்ள, கவுன்டருக்கு செல்ல வேண்டும். பக்தர்கள் கவுன்டருக்கு செல்லும் நேரத்திலிருந்து, 24 மணி நேரத்திற்குள், காலியாக உள்ள டோக்கன்களை, தாங்கள் விரும்பும் நேரத்திற்கு தேர்வு செய்து, டோக்கன் பெறலாம். பக்தர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, ஏ.டி.சி., பகுதியில் உள்ள, திவ்ய தரிசனம் காத்திருப்பு அறைக்கு செல்ல வேண்டும். அங்கு, இரண்டு மானிய விலை லட்டு டோக்கன், இரண்டு கூடுதல் விலை லட்டு டோக்கன்களை பெற்று, நேரடியாக, தரிசன வரிசையில் நுழையலாம். தரிசன வரிசைக்குள் நுழைந்த, இரண்டு மணி நேரத்திற்குள், ஏழுமலையானை தரிசித்து திரும்பலாம்.ஆதார் இல்லாத பக்தர்கள் அல்லது காண்பிக்க விரும்பாத பக்தர்கள், வழக்கம் போல், வைகுண்டம் காத்திருப்பு அறை - 2 வழியாகச் சென்று, காத்திருந்த பின், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இந்த முறை, டிச., 18 - 23 வரை, ஆறு நாட்கள் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது. அதன்பின், இதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதும், 2018பிப்., முதல், இந்த புதிய திட்டம், நிரந்தரமாக அமல்படுத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.