பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
தர்மபுரி: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தன. சனிபகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு, நேற்று இடம் பெயர்ந்தார். இதையொட்டி, சிவன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. சனிபகவானுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஹரிஹரநாத சுவாமி கோவில்தெரு ராமலிங்க சௌடேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், காரிமங்கலம் அபிதகுஜலாம்பால் சோமேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், அரியகுளம் சொக்கநாதர் கோவில், உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் அமைந்துள்ள தீர்த்தகுள காசி சனீஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தன. காசி சனீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள சனிபகவான் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபி?ஷக, ஆராதனைகள் நடந்தன. ஓசூர் பிருந்தாவன் நகரில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. கெலமங்கலம் - ஜிபி சாலையில் உள்ள சனிபகவான் கோவில், தேன்கனிக்கோட்டை - திம்மசந்திரம் சாலையில் உள்ள சனி பகவான் கோவில், ஓசூர் ராம் நகர், சமத்துவபுரம், மத்திகிரி, உத்தனப்பள்ளி அடுத்த டி.குருபரப்பள்ளி, அத்திமுகம், பேரிகை அருகே உள்ள சொன்னேபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சனி பகவான் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள எந்திரவடிவிலான சனீஸ்வர பகவான் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் பக்தர்கள் நெய் தீபம் மற்றும் நவதானிய தீபம் ஏற்றி, சனி பகவானை வணங்கி சென்றனர்.