பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
சேலம்: சனிப்பெயர்ச்சியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பரிகார பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சனிபகவான், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்து, விசேஷ அபி?ஷகம் நடந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, வாசவி மஹால், வாய்க்கால்பட்டறையில் உள்ள சுபமுகூர்த்த மண்டபம் ஆகிய இடங்களில், சனிப் பெயர்ச்சி சிறப்பு யாகம் நடந்தது. அதில், ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
* உத்தமசோழபுரம், கரபுர நாதர் கோவிலில், கரடிசித்தர் சன்னதி முன், காலை, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு பூஜை நடந்தது. பின், 108 முலிகைகளால், பரிகார யாகம் நடந்தது. அதில், 27 நட்சத்திரக்காரர்கள் பங்கேற்றனர். அதேபோல், சேலம், ஸ்வர்ணபுரியில் உள்ள ஸ்வர்ண விநாயகர், ரெட்டியூர் சூட்சம மஹாசக்தி காளியம்மன், அடிவாரம் பஞ்சமுக விநாயகர், மல்லூர் கோட்டைமேடு சனிபகவான், ஓமலூர் காசி விஸ்வநாதர், தாரமங்கலம் கைலாசநாதர், வாழப்பாடி காசிவிஸ்வநாதர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், தலைவாசல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில், சந்தோஷ சனீஸ்வரர் துணைவியார் நீலாதேவியுடன் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் குமரேசன், ஆர்.டி.ஓ., ராமதுரைமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடக்கும் என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். ’சில திருப்பணிகளை முடித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும்’ என, வரதராஜன் தெரிவித்தார்.