பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
சனிப்பெயர்ச்சியை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், சனீஸ்வர பகவான் உள்ள கோவில்களில், பரிகாரத்துக்காக மக்கள் குவிந்தனர். இதனால் விழா களை கட்டியது. சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு, நேற்று காலை இடம் பெயர்ந்தார். இதனால் சுப பலன், மத்திம பலன் பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் கோவில்களில் பணம் செலுத்தி பரிகார பூஜை செய்தனர். ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 500 பேர் பூஜைக்கு பணம் செலுத்தியிருந்தனர். சனிப் பெயர்ச்சியை ஒட்டி, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அர்ச்சனை, அலங்காரம் மற்றும் சங்கல்ப பரிகார பூஜை நடந்தது. இதேபோல் காரை வாய்க்கால் சுயம்பு நாகர் ஆலயம், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.
* கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு, சிறப்பு யாகம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வர சுவாமி கோவில், சிவகிரி வேலாயுதசுவாமி கோவில், தலையநல்லூர் நாகேஸ்வர சுவாமி கோவில், கொல்லங்கோவில் உத்தமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு, பரிகார பூஜைகள், மஹா யாகங்கள் நடந்தன.
* கோபி பச்சமலை முருகன் கோவிலில், சனீஸ்வரருக்கு கலச பூஜை, நவக்கிரஹ ஆவாஹனம், பரிகார ஹோமம், சிறப்பு பரிகார அர்ச்சனை நடந்தது. சிறப்பு பரிகார அர்ச்சனையில், 5,700 பேர் பங்கேற்றனர். இதேபோல், கோபி பவளமலை முருகன் கோவில், பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது.
* பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில், நவகிரக பூஜை மற்றும் சனீஸ்வர மூலமந்திர யாகம் நடந்தது.
* பவானி, சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், சனீஸ்வர சன்னதியில், சனி பிரீத்தி ஹோமங்கள், நவகிரக ஹோமங்கள், 27 நட்சத்திர ஹோமங்கள் நடந்தன. சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இதேபோல் பவானி, அம்மாபேட்டை காவிரிக்கரையோர மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில், விழா நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி சுப்ரமணியர் கோவிலில், சிறப்பு வேள்வி பூஜைகள், பரிகார ஹோமம் நடந்தன. த்தியமங்கலத்தில், பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பவானீஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.