பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
சென்னை: சனிப்பெயர்ச்சியை ஒட்டி, நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பரிகார பூஜைகள் நடந்தன. சனிப் பெயர்ச்சி, மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என, ஹிந்து மக்களிடம் பரவலான நம்பிக்கை உள்ளது. சனி பகவான் இடம் பெயரும் ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொள்வதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி, நேற்று காலை, 9:59 மணிக்கு நடந்தது. சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதன் மூலம், மேஷம், கடகம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் உத்தம பலனும்; மிதுனம், சிம்மம், மீனம் ஆகிய ராசிகள், மத்யம பலனும்; ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனு மகரம் ஆகிய ராசிகள், அதம பலனும் பெற்றன. ரிஷபத்திற்கு, அஷ்டம சனியும்; கன்னிக்கு, அர்தாஷ்டம சனியும்; விருச்சிகத்திற்கு, பாத சனியும்; தனுசுக் ஜன்ம சனியும்; மகரத்திற்கு, விரய சனி பலன் கிடைக்கிறது என, ஜோதிட வல்லுானர்கள் தரப்பில் கூறப்பட்டது.
சனிப் பெயர்ச்சியான நேற்று, அதம பலன் பெறக்கூடிய ராசியில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துக் கொண்டனர். வட திருநல்லாறு எனப்படும், பொழிச்சலுார் - அகதீசுவரர் கோவில்; பூந்தமல்லி - கைலாசநாதர் கோவில்; திருவள்ளூர் - அருங்குளம்; மாடம்பாக்கம் - தேனுபுரீசுவரர் கோவில்; மேற்கு மாம்பலம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சனி பிரவேச பரிகாரத்திற்கான ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், சங்கல்பம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.கோவில்களில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்கள் ராசிக்கு சங்கல்பம் செய்துக் கொண்டனர்.சென்னையில் திருநள்ளாறுசனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, சென்னையில் திருநள்ளாறு எனும் நிகழ்ச்சி சாலிக்கிராமம், வேலாயுதம் காலனியில் நேற்று நடந்தது. காலை, 6:00 மணி முதல், 1:30 மணி வரை, சனிப்பெயர்ச்சி ராசிக்காரர்களுக்காக, சிறப்பு ஹோமம் நடந்தது.இதில், கோ பூஜை, கணபதி ஹோமம், சாந்தி, ஆயுஷ் ஹோமம், சங்கல்பம், கலச ஸ்தாபனம், நவக்கிரஹ சனீஸ்வர ஜபம், 28 நட்சத்திர ஹோமம் உள்ளிட்டவை இடம் பெற்றன. திருநள்ளாறில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கலச ஸ்தாபதம் செய்யப்பட்டது.