பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோவில்களில் நடந்த சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊட்டி காந்தளில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த, 10ம் தேதி முதல் பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, நேற்று நடந்த, சனி பெயர்ச்சி பெருவிழாவையொட்டி, காலை, 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கலச பூஜை, சனிபிரீத்தி ேஹாமம், மஹா பூர்ணாகுதி, சனிபகவானுக்கு மஹா அபிேஷகம், மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு உள்ளூர், வெளியிடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
* இதேபோல, பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் சனீஸ்வரபகவான் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், ஹோமமும் நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு துவங்கிய யாக பூஜையை பரமசிவம் குருக்கள் தலைமையிலான அர்ச்சகர்கள் இணைந்து நடத்தினர். இதில், அனைத்து ராசியினருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஹோமம் நடத்தப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* கூடலுார் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகபூஜைகள் நடந்தது. காலை, 8:00 மணிக்கு துவங்கிய பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதில், பரிகார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சனிபெயர்ச்சி விழா நடந்தது.