பதிவு செய்த நாள்
20
டிச
2017
01:12
மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோவில்களில் சனீஸ்வர பகவானுக்கு பரிகார யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.நவக்கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு, நேற்று, காலை, 9:59 மணி முதல், 10:30 மணிக்குள் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, திருவள்ளூர் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவள்ளூர் : பூங்கா நகரில் யோகஞான் தட்சிணாமூர்த்தி பீடத்தில் ஞானமங்கள சனீஸ்வர பகவான் சன்னதியில், நேற்று, காலை, 7:00 மணிக்கு பரிகார ஹோமம் துவங்கியது. காலை, 8:30 மணிக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தேவி மீனாட்சி நகர், காரியசித்தி விநாயகர் கோவிலில், சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. பின், விநாயகர், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
ஜெயா நகர் : விஸ்தரிப்பில் உள்ள மகா வல்லப கணபதி கோவில், பூங்கா நகரில் உள்ள சிவ - விஷ்ணு கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பரிகார மகா யாகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் எள் விளக்கேற்றி நீல மலர்களால் அலங்கரித்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
திருத்தணி : திருத்தணி, பழைய தர்ம ராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.காலை, 7;00 மணிக்கு, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைத்து, கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி, நவகிரக ஹோமம் மற்றும் கோ பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, தனி சன்னதியில் வீற்றிருக்கும் யோக சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, பரிகார பூஜைகள் நடந்தன.அதே போல், நாபளூர் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருத்தணி வீரட்டீஸ்வரர் கோவில், திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர், ம.பொ.சி.சாலையில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி உட்பட சிவன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.