திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பெருகி வரும் ஆக்கிரமிப்பால் பக்தர்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். திருப்புவனம் அருகே மடப்புரத்தில் புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. கேட்ட வரம் தருபவள், தவறு செய்பவர்களை தண்டிப்பவள் என்பதால் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மடப்புரம் காளியை சாந்தப்படுத்த பக்தர்கள் எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும், இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கம், கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி கோயில் வாசலின் இருபுறமும் எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், சூடம், பொரி உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன.
கோயில் வாசலில் ஏராளமான கடைகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் செல்ல முடியாதபடி அமைந்திருக்கும் கடைகளால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கோயில் சுவற்றை ஒட்டி அமைந்துள்ள கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. கடைகளை காலி செய்த வியாபாரிகள் கோயில் எதிரே ஆக்கிரமித்து வரிசையாக கடைகளை அமைத்து விட்டனர். இரண்டு அடுக்குகளாக கடைகள் வரிசையாக அமைந்திருப்பதால் பஸ்கள், வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ்களில் இருந்து பக்தர்கள் ஏறவும் இறங்கவும் முடியாமல் திணறி வருகின்றனர். ரோட்டை ஒட்டி கடைகள் அமைந்திருப்பதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இரண்டு பஸ்கள் தாராளமாக செல்லும் இடத்தில் தற்போது ஒரு பஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே மடப்புரத்தில் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி போக்குவரத்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.