பதிவு செய்த நாள்
25
டிச
2017
01:12
ஆர்.கே.பேட்டை : நான்கு நாட்களாக நடந்த வந்த செவ்வாடை தொண்டர்களின் தைப்பூச இருமுடி பெருவிழாவில், நேற்று, கலச விளக்கு மற்றும் சிறப்பு வேள்வி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் மேல்மருவத்துாரம்மன் வழிபாட்டு மன்றத்தில், தைப்பூசம் இருமுடி பெருவிழா, 21ம் தேதி துவங்கியது. அன்று, காலை, 10:00 மணிக்கு, கிராம தேவதை பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து, செவ்வாடை தொண்டர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று, கோவில் வளாகத்தில் சக்தி கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து, கலச விளக்கு சிறப்பு வேள்வி நடந்தது. புனிதநீர் அடங்கிய கலசங்களும், குத்துவிளக்குகளும் அலங்கரிக்க, சிறப்பு வேள்வி துவங்கியது. வேள்வியை, மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் மோகனசுந்தரி, ஜெயசுந்தரவேல் துவக்கி வைத்தனர்.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், ’அன்னையின் அற்புதம்’ என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திராவிட மணி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.இரவு, 10:00 மணிக்கு, செவ்வாடை தொண்டர்கள், மருவத்துார் நோக்கி தங்களின் பயணத்தை துவக்கினர். இன்று, அம்மனை தரிசனம் செய்கின்றனர்.