பதிவு செய்த நாள்
26
டிச
2017
12:12
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசனத்தில், 24 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள், கடும் அதிருப்தி அடைந்தனர்.தொடர் விடுமுறை காரணமாக, ஆந்திர மாநிலம் திருமலையில், மூன்று நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனால், நேற்று தர்ம தரிசனத்தில் பக்தர்கள், 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள, 32 காத்திருப்பு அறைகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. காத்திருப்பு அறைகளுக்கு வெளியிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க, தேவஸ்தானம் முன்னேற்பாடுகள் செய்த போதும், அளவுக்கு அதிகமாக பக்தர்கள் வருகை தந்ததால், அவர்களின் தேவையை நிறைவேற்ற முடியாமல் ஊழியர்கள் திணறினர். அதனால், உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை கிடைக்காமல், பக்தர்கள் தரிசன வரிசையில் அவதிக்குள்ளாயினர். விடுமுறையின் போது, பக்தர்களின் வருகைக்கு ஏற்படி, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவ ஸ்தானம் தவறிவிட்டது என, பலரும் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, திருமலையில் விரைவு தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யும் கவுன்டரில் பணிபுரியும் இருவரின் உதவியுடன், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக கூறி, பழைய டிக்கெட்டை நகல் எடுத்து, பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று மோசடி செய்ததாக, இடைத்
தரகர் வாசு என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் ரூ.4 கோடி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களால் இயன்ற காணிக்கையை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். தினமும், மூன்று கோடி ரூபாய் வரை, உண்டியல் மூலம் சராசரியாக, தேவஸ்தானத்துக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக மூன்று நாட்களாக திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், தேவஸ்தானத்திற்கு நேற்று முன்தினம் மட்டும், நான்கு கோடி ரூபாய் வருமானமாக கிடைத்து உள்ளது.