பதிவு செய்த நாள்
26
டிச
2017
01:12
மடத்துக்குளம்;மடத்துக்குளம் அருகே வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள புலைக்கருப்பணசாமி பழமையான வழிபாட்டின் அடையாளமாக உள்ளது. முற்காலத்தில் விவசாயம் மற்றும் வேட்டையாடுதல் முக்கிய தொழிலாக இருந்தது. காடுகள், விளைநிலங்களின் அருகில் மக்களின் வசிப்பிடங்கள் இருந்தன. இந்த நிலங்களை சார்ந்தே மக்களின் வாழ்க்கை அமைந்தது. இரவு, பகல் பாராமல் மக்கள் விவசாயம் மற்றும் வேட்டையில் ஈடுபட்ட காலத்தில் மக்கள், பல வழிபாடுகளை உருவாக்கினார்கள். இதில் ஒன்றாக மடத்துக்குளம் - கொமரலிங்கம் ரோட்டில் நீலம்பூர் பழைய ஆயக்கட்டு பாசன விளைநிலங்களுக்கு மத்தியில், புலைக்கருப்பணசாமி கோவில் உள்ளது. மிகசக்தி வாய்ந்த தெய்வமாக அப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.
இரு நடுகல் அதனை சுற்றி வேல், சூலம், அரிவாள், மற்றும் பல ஆயுதங்கள் உள்ளன. சில செங்கல்களை பயன்படுத்தி விளக்கேற்ற ஒரு மாடம் கட்டி உள்ளனர். வேம்பு மற்றும் சில மரங்கள் இந்த கோவிலை சுற்றி வளர்ந்துள்ளன. கிழக்கு நோக்கி உள்ள கோவிலுக்கு விளைநிலத்தின் இடையில் பாதை உள்ளது. தீபம் வைத்தும், சூடம், பத்தி, சாம்பிராணி கொளுத்தியும், சுருட்டு வைத்தும் வணங்குகின்றனர். சுற்றுசுவரோ, மின் விளக்குகளோ ஏதும் இல்லை, என்பதால், சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் மட்டும்,கோவிலுக்கு வந்து திரும்புகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், சில நுாற்றாண்டுகளுக்கு முன், இந்தப்பகுதியில் புலையர் என்ற சமூகத்தினர் வசித்துள்ளனர். வேட்டை, தேன் எடுத்தல் போன்ற காடு மலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த இவர்கள் வழிபட்டதால் புலையர் கருப்பணசாமி என அழைக்கப்பட்டது. பின், இந்தப் பகுதியில் விவசாயம் நிலைபெற்ற பின்பு, பொதுவாக அனைவரும் வழிபட தொடங்கினர். நாளடைவில் புலைக்கருப்பணசாமி என்றாகி விட்டது, என்றனர்.
மேற்கு நீலம்பூர் பஸ்: ஸ்டாப்பில் இறங்கி வாய்க்கால் அருகிலுள்ள குறுகலான மண்பாதையில், சிறிது தொலைவு, சென்று விளைநிலங்களை அடையலாம். அங்குள்ள வரப்புகளில் இறங்கி நடந்து, வயல்வெளி மத்தியில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைந்துள்ள கோவிலுக்கு செல்லலாம்.