பதிவு செய்த நாள்
27
டிச
2017
11:12
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 1.50 கோடி ரூபாயில், திருப்பணி நடக்கிறது; மார்ச் 4ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு மன்னீஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவில் பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு, பல ஞானிகளால் வழிபடப்பட்ட
பெருமையுடையது. இங்கு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் ஆகின்றன. இதை யடுத்து திருப்பணிகள் துவங்கி நடக்கின்றன.
அருந்தவச் செல்வி அம்மன் சன்னதிக்கும், மன்னீஸ்வரர் சன்னதிக்கும் இடையில், வசந்த
மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மூன்று நிலை விமானத்துடன் கூடிய கர்ப்பகிரகம்
இப்பகுதியிலேயே பெரியதாகும்.
தளம் அமைத்தல், பல சன்னதிகளில் விமானம் அமைத்தல், சுதைகள் அமைத்தல், வர்ணம் தீட்டுதல், ஐந்து கால ஹோம பூஜையுடன் கும்பாபிஷேகம் செய்தல் என, 1.50 கோடி ரூபாயில் திருப்பணி செய்யப்படுகிறது.
இக்கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமானும், கயிலாயம் செல்லும் காட்சி,
முதலையுண்ட பாலகனை சுந்தரமூர்த்தி நாயனார் மீட்கும் காட்சி, பள்ளி கொண்ட பெருமா னின் அனந்தசயனக்காட்சி ஆகியவை சிற்பங்களாக உள்ளன.
திருப்பணி, 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது.
பிப்., 27 ம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மார்ச் 3 ம் தேதி வரை ஐந்து கால ஹோம பூஜைகள் நடக்கின்றன.
மார்ச் 4 ம் தேதி காலை, 7:30 மணிக்கு விமானம், ராஜகோபுரம், அருந்தவச்செல்வி அம்மன் மற்றும் மன்னீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.