பதிவு செய்த நாள்
29
டிச
2017
10:12
ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்ம சாஸ்தா புஷ்கலாதேவி திருக்கல்யாணம் கோலாகல மாக நடந்தது. இதில் கேரள, தமிழக பக்தர்கள் கலந்து கொண்டனர். சபரிமலையில் ஐயப்பன் சன்னியாசியாகவும், குலத்துப்புழையில் பாலகனாகவும், ஆரியங்காவில் வாலிபராகவும் அருள்பாலிக்கிறார். சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை மணந்து கொண்டு ஆரியங்காவில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கிறார். திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம்போர்டு சவுராஷ்டிரா மக்களை சம்பந்தி முறை வைத்து கவுரவிக்கின்றனர். இதனால் சவுராஷ்டிரா சமூகத்தினர் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். திருக்கல்யாண உற்ஸவத்தை இரு வீட்டார் இணைந்து பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.
தாலப்பொலி விழா : கேரள, தமிழக பக்தர்கள் இணையும் விழாவாக ஆரியங்காவு கோயிலில் திருக்கல்யாணம் நடக்கிறது. இந்தாண்டுக்கான திருக்கல்யாண உற்ஸவம் டிச.,23ல் கேரள மாநிலம் மாம்பழத்துறையில் அம்மனின் ஜோதி ரூப தரிசனத்துடன் துவங்கியது. ஆரியங்காவில் டிச.,24ல் தாலப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் பாரம்பரிய உடையணிந்த மலையாள பெண்கள், குழந்தைகள் குறுத்தோலை, விளக்கு ஏந்தி கலந்து கொண்டனர். அன்று இரவு 8:00 மணிக்கு ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சங்க தலைவர் டி.கே.சுப்ரமணியன், திருவாங்கூர் தேவசம் போர்டு ஆரியங்காவு அதிகாரி எஸ். கணபதி போத்தி ஆகியோர் தலைமையில் நடந்தது. சம்பிரதாயங்களை பொதுச்செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் செய்தார். மூத்த தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண விழா : டிச.,25ல் இரவு 10:00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இரு மாநில பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்ஸவதாரர்களாக கே.ஆர்.ஹரிகரன், எஸ்.ஜெ.கண்ணன், எஸ்.கே.ரவிச்சந்திரன், டி.எஸ்.ஆனந்தம் இருந்தனர். டிச.,26ல் மதியம் 2:00 மணிக்கு மண்டலாபிஷேக பூஜையுடன் நிறைவு பெற்றது.