நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள்: காரமடையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2017 02:12
மேட்டுப்பாளையம்: பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளில், அரங்கநாதப் பெருமாள் மோகினி அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை, அரங்கநாத பெருமாள் மோகினி அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில், எழுந்தருளி கோவிலின் உள்ளே வலம் வந்தார். பின் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி முன் கோவில் ஸ்தலத்தார், பட்டர் சுவாமிகள் ஆண்டாள் அருளிய திவ்விய பிரபந்தத்தில் உள்ள நாச்சியார் திருமொழி பாசுரங்களை சேவித்தனர். இன்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடைதிறப்பும், திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் பாடப்பட உள்ளது. அதிகாலை, 5:45 மணிக்கு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.