பதிவு செய்த நாள்
29
டிச
2017
02:12
மோகனூர்: மோகனூர், நாவலடி கருப்பண்ண சுவாமி கோவிலில், ஜூன், 17ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில், பழமை வாய்ந்த நாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. முற்காலத்தில், வணிகம் செய்ய சென்ற சில வணிகர்கள், இங்கு வந்தபோது, இரவானதால், தாங்கள் கொண்டு வந்த ஒரு கல்லை, நாவல் மரத்தினடியில் வைத்துவிட்டு தூங்கினர். மறுநாள் காலையில், அவர்களால் கல்லை எடுக்க முடியவில்லை. அப்போது, பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசாமி, தானே கல்வடிவில் இருப்பதாக, தன்னை அவ்விடத்தில் வைத்து கோவில் எழுப்பும்படி கூறியுள்ளார்.அதையடுத்து, கோவில் கட்டி வழிபாடு செய்யப்படுகிறது. நாவலடி கருப்பசாமி, இக்கோவிலில், ஒரு பள்ளத்துக்குள் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பக்தர்கள், தங்கள் வேண்டுதலை, ஒரு காகிதத்தில் மனுவாக எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகின்றனர். அவ்வாறு செய்தால், விரைவில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். தினமும் ஆடு, கோழி பலி பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில், 2002, ஜூன், 21ல் கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ராஜகோபுரம் கட்டும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஜூன், 17ல், கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.