தில்லை மரங்கள் அடர்ந்த வனமான சிதம்பரத்தில் ஆடும், நடராஜரின் திருநடனம் காண, வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் செய்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நன்னாள் வந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அங்கே கூடினர். துந்துபி கள், பானுகம்பன் போன்ற தேவலோக வாத்தியக்காரர்கள் வாத்தியங்களை இசைத்தனர். பிரம்மா,விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதியும் வந்து சேர்ந்தனர். மூவாயிரம் தில்லை அந்தணர்களும் அங்கே ஒன்று கூடினர். அப்போது, நந்தியின் மீது நடராஜப்பெருமான் எழுந்தருளினார். அம்பாள் பார்வதி, சி வகாமி (சிவன் மீது விருப்பம் கொண்டவள்) என்ற பெயருடன் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். எல்லாரும் நடனம் கண்டனர். நடனம் ஆடியதால், நடராஜா என்று போற்றினர்.