பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
ஈரோடு: புத்தாண்டு தினமான நேற்று, அதிகாலையிலேயே பொதுமக்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
ஈரோடு சூரம்பட்டிநால்ரோடு விநாயகர் கோவில், திண்டல் வேலாயுத சுவாமி கோவில், கள்ளுக்கடை மேடு ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள், அதிகளவில் கூடி வழிபாடு செய்தனர். புத்தாண்டு மட்டுமின்றி, ஆருத்ர தரிசன விழாவும் ஒன்றிணைந்ததால், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோவில் கொடிமரம் அருகே விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டனர்.
* கோபியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரே உள்ள குண்டத்தின் முன், பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல், கோபி சாரதா மாரியம்மன், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், பக்தர்கள் குவிந்தனர்.
* சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த, வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற, பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகை தந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
* பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் உட்பட பல்வேறு சுவாமிகளுக்கு ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, சிறப்பு அபி ?ஷக ஆராதனை செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. அதே போல் காசி விஸ்வநாதர் கோவில், செல்லியாண்டியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரை ஓரத்திலுள்ள, மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஊத்துக்குளி அம்மன், ஐயப்பன் கோவில்களில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்குளி அம்மனுக்கு சந்தனகாப்பு, அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. பிளேக் மாரியம்மன் வெள்ளிக்கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* கோவை சாலையிலுள்ள அந்தோணியார் சர்ச், சி.எஸ்.ஐ., பெந்தகொஸ்தே, டி.ஈ.எல்.சி., சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.
* சென்னிமலை, முருகன் கோவிலில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் கோமாதா பூஜை நடந்தது. மார்கழி மாத விழா குழு சார்பில், சிறப்பு வழிபாடு அபி ?ஷகம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து இரவு வரை நடந்தது. அப்போது முருகப்பெருமான் மூலவர், வெள்ளி கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி - தெய்வானை, தன்னாசியப்பன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.