பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசாமி கோவிலில் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வெள்ளமென குவிந்தனர். திருப்போரூரில் அறுபடைவீட்டிற்கு நிகரான, சுயம்பு மூர்த்தியான கந்தசாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று, ஆங்கில புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் மழைவெள்ளமாக குவிந்தனர். பிரார்த்தனையாக நுாற்றுக்கணக்கானோர் சிகை நீக்கி, சரவண பொய்கையில் குலித்தனர். ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்துகளில் நகரில் குவிந்தனர். சாதாரண வரிசை மற்றும் சிறப்பு கட்டண வரிசையிலும் பக்தர்கள் மூன்று மணிநேரத்திற்கு நின்று கந்தனை மெய்சிலிர்க்க வழிப்பட்டனர்.திருப்போரூர் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பேரூராட்சி, கோவில் நிர்வாகத்தினர் சுகாதார குடிநீர் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.கோவில் நடை, அதிகாலை, 2:30 மணியிலிருந்து நாள் முழுவதும் திறந்திருந்தது. அதேபோல் நெல்லிகுப்பம் வேண்டவராசியம்மன் கோவில், காட்டூர் வைதீஸ்வரன் கோவில், செம்பாக்கம் பாலா திரிபுரசுந்தரி, ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.