திருநெல்வேலி:செப்பறை கோயிலில் திருவாதிரை தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது.நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் செப்பறை அழகியகூத்தர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா விஷ்ணு, அக்னி பகவான், அகத்தியர், வாமதேவ ரிஷி மற்றும் மணப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக்காட்சியளித்தாக தல புராணம் கூறுகிறது.
தாமிரபரணி ஆற்றின் கரையில், செப்பு அறைகளால் வேயப்பட்ட கோயில் என்பதால் தாமிரசபை என்றும் அழைக்கப்படுகிறது. மார்கழியில் திருவாதிரை திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 30ம் தேதி சுவாமி அழகியகூத்தருக்கு மாலையில் சிவப்பு சாத்தி தரிசனமும், நேற்றுமுன்தினம் காலையில் வெள்ளை சாத்தி தரிசனமும் நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
பகல் 12 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் விமரிசையாக நடந்தது.இரவு 2 மணிக்கு மஹா அபிஷேகமும், அதிகாலை 5.30 மணிக்கு கோ பூஜை மற்றும் ஆருத்ரா தரிசனமும் நடந்தன. பகல் 2 மணிக்கு நடன தீபாராதனையும், 3 மணிக்கு அழகியகூத்தர் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அழகிய கூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.