துாத்துக்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் புத்தாண்டையொட்டி நேற்று பக்தர்கள் ஆயிரத்து எட்டு பால்குடம் ஊர்வலம் மேற்கொண்டனர்.துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே உள்ள கடற்கரை கிராமம் குலசேகரபட்டினம். இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நேற்று புத்தாண்டையொட்டி உலக நன்மைக்காக 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். கோயிலில் 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், மகாஹோமம் உள்ளிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் துவங்கிய பால்குட ஊர்வலம், யானை முன் செல்ல பெண்கள் செல்ல மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்தது. முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை காமதேனு அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.