பதிவு செய்த நாள்
04
ஜன
2018
11:01
பழநி, பழநி முருகன் கோயில் தைசப்பூச விழா ஜன.,25ல் துவங்கி பிப்.,3 வரை நடக்கிறது. தைப்பூச நாளான ஜன., 31 அன்று சந்திரகிரகணம் என்பதால் தேரோட்டம் காலையில் நடக்க உள்ளது.பழநி தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.25ல் கொடியேற்றம், மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புகட்டுதலுடனும் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜன.,30ல், திருக்கல்யாணம், ஜன.,31 தைப்பூசத்தன்று தேரோட்டம் நடக்கிறது.
இந்த ஆண்டு தைப்பூச நாளின் போது மாலை 6:22மணி முதல் இரவு 8:41 வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது.இதனால் பெரியநாயகியம்மன் கோயிலில் வழக்கமாக மாலை 4:00 மணிக்கு நடைபெறும் தேரோட்டம் காலை 11:00 மணிக்கு நடக்கிறது. மலைக் கோயிலில் மாலை 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையை மதியம் 2:45மணிக்கு செய்து 3:45 மணிக்கு நடை சாத்தப்படும்.இதற்காக நாளை (ஜன.,5ல்) இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா தலைமையில் தைப்பூசவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழநியாண்டவர் கல்லுாரியில் நடக்கிறது.இதுகுறித்து இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், சந்திரகிரகணம் காரணமாக தைப்பூசத்தன்று பூஜைகளில் மாற்றம், நடையடைப்பு விபரங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளோம் என்றார்.