பதிவு செய்த நாள்
04
ஜன
2018
03:01
புதுச்சேரி
: கோவை தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்வு முகாமில் பங்கேற்க,
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று புறப்பட்டுச்
சென்றது. தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும்
விதமாக, அறநிலையத் துறை சார்பில், 2003ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் 48
நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டம், தேக்கம்பட்டி
பவானி ஆற்றுப் படுகையில் நடக்கும் முகாமில், யானைகளுக்கு நடைபயிற்சி,
ஊட்டச்சத்து உணவு, மருத்துவ பரிசோதனை, வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு
புத்துணர்வு முகாம், இன்று துவங்கி, பிப்., 20ம் தேதி வரை நடக்கிறது. இதில்
பங்கேற்க, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, நேற்று
புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக, யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை
செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பொங்கல், பழங்கள் உள்ளிட்டவை
யானைக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு யானை லட்சுமியிடம்
ஆசி பெற்றனர். மாலை 4:00 மணியளவில், தாவரவியல் பூங்காவிற்கு யானை அழைத்து
வரப்பட்டு, லாரி மூலம், முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் செயல்
அதிகாரி வெங்கடேசன், கால்நடை மருத்துவர் செல்வராஜ், பாகன்கள் இருவர் உடன்
சென்றனர்.
பிரக்குருதி புறப்பாடு: புத்துணர்வு முகாமில்,
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் யானை, பிரக்குருதியும் பங்கேற்க ஏற்பாடு
செய்யப் பட்டுள்ளது. யானையை வழியனுப்பும் நிகழ்ச்சி கோவிலில் நடந்தது.
கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா முன்னிலையில், சிவாச்சார்யர்
ராஜாசுவாமிநாதர், சுரேஷ், கார்த்திக், சக்தி ஆகியோர் யானைக்கு சிறப்பு பூஜை
செய்தனர். பின்னர், யானைக்கு பிரசாதம், பழங்கள் வழங்கி, லாரி மூலம்
முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.