பதிவு செய்த நாள்
05
ஜன
2018
11:01
திண்டுக்கல்: பழநிக்கு பாத யாத்திரை வரும் பக்தர்கள், இரவு, 2:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை நடப்பதற்கு, போலீசார் தடை விதித்துள்ளனர். தைப்பூசத்தை முன்னிட்டு, பழநிக்கு பாத யாத்திரையாக, பக்தர்கள் அதிகளவு செல்கின்றனர். இதில் சிலர், விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. விபத்துகள் பெரும்பாலும் இரவு, 2:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை நடக்கிறது. இதை தடுக்க, போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்குள் நுழையும் பக்தர்கள், இரவு, 1:00 மணிக்குள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும். காலை, 6:00 மணிக்கு பின்தான் நடக்க அனுமதிக்கப்படுவர். இது குறித்து, சக்திவேல், எஸ்.பி., கூறியதாவது: பல விபத்துகள் இரவு, 3:00 மணி முதல், 6:00 மணி வரையே நடந்துள்ளன. டிரைவர்கள் துாக்கத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். பக்தர்களும் துாக்கத்திலேயே நடக்கின்றனர். இதை கருதி, இரவு, 2:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, பக்தர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். அந்நேரத்தில் நடப்போரை தடுப்பதற்காக, இரவு, 7:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை, ஒரு குழுவும், அதிகாலை, 4:00 மணி முதல், காலை, 7:00 மணி வரை, மற்றொரு குழுவும் பணியில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.