பதிவு செய்த நாள்
05
ஜன
2018
11:01
மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கான, 10வது சிறப்பு புத்துணர்வு முகாம், கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நேற்று துவங்கியது. இதில், 33 யானைகள் பங்கேற்றன.
தமிழக அரசு, ஆண்டுதோறும் யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாமைநடத்தி வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம் இந்தாண்டு, 10வது யானைகள் முகாமுக்கு, இந்து அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று காலை நடந்த துவக்க விழாவில், 33 யானைகளும் அலங்காரம் செய்யப்பட்டு, கம்பீரமாக அணிவகுத்து நின்றன.
யானைகள் ஒன்றோடு ஒன்று தும்பிக்கையால் தடவி, பரஸ்பர நட்பை பகிர்ந்து கொண்டது, பார்வையாளர்களை பரவசம் அடைய செய்தது. காலை, 10:15 மணிக்கு, வனத்துறை அமைச்சர் சீனிவாசன், முகாமை துவக்கி வைத்தார். முகாம் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர்கோவிலில், கணபதி ஹோமத்துடன் யாகம் வளர்த்து, சிறப்பு பூஜைகள்செய்யப்பட்டன. பின், யானைகளுக்கு கரும்பு, பழங்களை அமைச்சர்கள் வழங்கினர். தற்போது துவங்கியுள்ள, 10வது சிறப்பு முகாம், பிப்., 20 வரை, 48 நாட்களுக்கு நடக்கிறது. முகாமில், தமிழக கோவில் யானைகள், 26; புதுச்சேரி கோவில் யானைகள், இரண்டு, மடங்களில் உள்ள யானைகள், ஐந்து என, மொத்தம், 33 யானைகள் இடம்பெற்றுள்ளன.யானைகளுக்கு தினமும் காலை, மாலை ஆனந்த குளியல் மற்றும் நடைபயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுர்வேத மூலிகை மருந்துகளுடன், பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம் ஆகிய உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. 1.17 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. கோவில் யானைகளை போல், கும்கி யானைகளுக்கும் அந்தந்த பகுதியில் வனத்துறை சார்பில் புத்துணர்வு முகாம் அமைத்து, தேவையான உணவு, மருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
காட்டு யானைகளுக்கு, செக் : காட்டு யானைகள் முகாமுக்குள் நுழையாமல் இருக்க, முகாமை சுற்றி, 5 கி.மீ.,க்கு, இரண்டடுக்கு சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து, வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். மேலும், முகாமுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முகாம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், கால்நடை டாக்டர்கள், கோவில் யானைகளின் நடவடிக்கையையும் கண்காணித்து வருகின்றனர்.