பழநி : பழநி முருகன்கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, கடந்த இரண்டு மாதமாக பென்ஷன் தொகை வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர். பழநி முருகன் கோயிலில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு மாதம் ரூ.2ஆயிரம் பென்ஷன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பணிக்கொடை தொகை வழங்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் பணிக்கொடை தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அறநிலையத்துறையினர் அதிகாரிகள் அதனை கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பருக்குரிய பென்ஷன் தொகையையும் வழங்கவில்லை. இதனால் ஓய்வு பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தைப்பூசவிழா ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவிடம் வலியுறுத்தினர். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஆணையர் எஸ்கேப் ஆலோசனை கூட்டத்தின் போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இவ்வாண்டு தைப்பூசத்தன்று சந்திரகிரகணம் வருவதால் 3:00 மணிக்கே பூஜைகள் செய்து நடைசாத்தப்படும். பக்தர்கள் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரண்டாவது ரோப்கார் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது பணிகள் விரைவில் துவங்கப்படும். பழநி கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது போன்றவை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதுபற்றி தற்போது விரிவாக பேச இயலாது. சென்னைக்கு வாங்க பேசிக்கலாம் எனக்கூறி எஸ்கேப் ஆனார்.