பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
திருப்புவனம் : மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செல்லும் பாத யாத்திரை பக்தர்களால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் பழநி, சபரிமலைக்கு விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 10:00 மணி வரையிலும் மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் நடப்பது வழக்கம். தற்போது பரமக்குடி, ராமநாதபுரம், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் பாதயாத்திரையாக மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றனர். கூட்டம் கூட்டமாக செல்லும் இவர்களிடம் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமிருப்பதில்லை. இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள், ஸ்டிக்குகள், டார்ச் லைட்கள் இன்றி வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தை நம்பியே செல்கின்றனர். இரவு நேரங்களில் சாலையோரம் செல்லும் இவர்கள் வாகன ஓட்டுனர்களுக்கு சரிவர தெரிவதில்லை, வெகு அருகில் வந்த பின் தான் சாலையோரம் பக்தர்கள் செல்வது தெரியவருகிறது. கனரக வாகனங்கள் பலவும் அதிவேகத்தில் செல்கின்றன.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து போலீசார் உரிய அறிவுரை கூறுவது வழக்கம், பிட் நோட்டீஸ்கள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவைகளை வழங்குவதும் வழக்கம், சமீப காலமாக போக்குவரத்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இதனால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். தற்போது பழநிக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியே செல்கின்றனர். கடந்த வாரம் சிலைமானில் இருந்து பாதயாத்திரையாக மடப்புரம் வந்த சிறுவன் கார் மோதியதில் பலியானது குறிப்பிடத்தக்கது. எனவே போக்குவரத்து போலீசார் பாதயாத்திரை பக்தர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும், இரவு நேரங்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.