பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
பழநி : பழநியில் கிரிவீதி, அடிவாரப்பகுதியில், சிலர் அலுமினிய பொருட்களில் முலாம் பூசி வைத்து, தங்கம், வெள்ளி காணிக்கை பொருட்கள் என விற்பதால், பழநி செல்லும் பக்தர்கள் பலர் ஏமாறுகின்றனர். பழநியில் தைப்பூசம், ஐயப்ப சீசனை முன்னிட்டு, தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். அவர்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தங்கம், வெள்ளியிலான பொருட்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இம்மாதிரியான பக்தர்களை குறிவைத்து கிரிவீதி, அடிவாரப்பகுதியில் நடைபாதை வியாபாரிகள், சிறுகடைக்காரர்கள் தங்கம், வெள்ளியிலான குத்துவிளக்குகள், வேல், சுவாமி சிலைகள், கால், தலை, உருவம், பாதம் மற்றும் டாலர்கள், வெண்கலம், பித்தளை விளக்குகள் என பல வகையான பொருட்களை விற்கின்றனர். இதில் பெரும்பாலானவை அலுமினியத்தில் தங்கம், வெள்ளி மூலம் பூசிய தகடுகளாக போலி பொருட்களாக உள்ளன. அவை பார்ப்பதற்கு அசல் தங்கம், வெள்ளி போல பள பளவென தெரிவதாலும், விலை குறைவாக சொல்வதாலும் பக்தர்கள் நம்பி வாங்கி ஏமாறுகின்றனர்.
போலி பொருட்கள்: பழநி கோயிலில் உண்டியல் எண்ணிக்கை மாதம் ஒருமுறையும், விழாக்காலங்கள் என்றால் 15 நாட்களுக்கு ஒருமுறையும் எண்ணப் படுகிறது. அப்போது, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ள பொருட்களில் அதிகமாக காணப்படுவது இந்த போலியான தங்கம், வெள்ளி மூலம் பூசப்பட்ட அலுமினியத்திலான பொருட்களே.இவற்றை திரும்ப பயன்படுத்த முடியாததால் மூட்டைகளாக கட்டி வைக்கின்றனர். ஆகையால் பக்தர்கள் விலையை விசாரித்து, கவனமாக தரமான தங்கம், வெள்ளியில் ஆன பொருள்தானா என சரிபார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் ஏமாறுவது நிச்சயம்.