வத்திராயிருப்பு: இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் உணவளித்த தினமான கோட்டப்பிரதஷ்டமி தினம் வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் விமரிசையாக நடந்தது. சிவபெருமான் உலகில் அவதரித்த முப்பத்து முக்கோடி ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கிய தினம் கோட்டப்பிரதஷ்டமி தினத்தில்தான். இதைநினைவூட்டும் வகையில் சகல சிவன் கோயில்களிலும் இந்த வழிபாடு விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் வத்திராயிருப்பு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் இவ்விழா அஷ்டமி பிரதட்ஷன வழிபாடாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மூலவருக்கு முன் பூரண கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது.
பூஜிக்கப்பட்ட கும்பநீரால் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சஷ்டி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் உற்ஸவர் எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து விசாலாட்சியம்மனும் பச்சைப் பட்டுடன் எழுந்தருளினார். இருவருக்கும் தேவாரப் பாராயண வழிபாட்டுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையின் முடிவில் சுவாமி பக்தர்களுக்கு அருளாசிகள் வழங்குவதற்காக வீதியுலா சென்றார். இறைவன் ஜீவராசிகளுக்கு உணவளித்ததை நினைவுகூறும் வகையில் வீதியுலா செல்லும் பாதையின் இருபுறமும் அரிசி தூவப்பட்டது. மீண்டும் கோயிலை அடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து மைய மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர். ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் சேதுசுந்தரப்பட்டர். ராஜசேகரப்பட்டர், கோயில் நிர்வாக அதிகாரி சுந்தராஜன் செய்தனர்.