திருச்செந்தூர்:திருச்செந்தூரில் சுவாமி அய்யப்பர் ரத பவனி நடந்தது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருச்செந்தூரில் 10-வது ஆண்டு அய்யப்ப சுவாமி ரத பவனி விழா நடந்தது. இதையொட்டி சன்னதி தெருவில் உள்ள கம்பர் மடத்தில் காலை கணபதி ஹோமம், அய்யப்பருக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் மதியம் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலையில் அய்யப்பர் வண்ணமலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு சுவாமி அய்யப்பர் ரதத்தில் பவனி வந்தார். இந்த ரத பவனி, சன்னதி தெருவில் உள்ள தூண்டிகை விநாயகர் கோயில் முன்பு இருந்து புறப்பட்டு சன்னதி தெரு வழியாக வந்து வெளி வீதி நான்கிலும் மற்றும் உள்மாட வீதி நான்கிலும் பவனி வந்தது.நிகழ்ச்சியில் அகில பாரத அய்யப்ப சேவா சங்க மாவட்ட செயலாளர்கள் சங்கரசுப்பிரமணியன், அப்பனசாமி, தொழில் அதிபர் புளியங்குடி சங்கரநாராயணன், திருச்செந்தூர் நகர பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு உட்பட ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்க திருச்செந்தூர் கிளை தலைவர் சுப்பையா, செயலாளர் அஜித்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன் அன்னதான கமிட்டியினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.