பதிவு செய்த நாள்
18
ஜன
2018
12:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா நாணயங்களை சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசுப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் 2010 முதல் அப்பகுதியில் கிடைக்கும் பழங்கால நாணயங்களை கண்டெடுத்து வருகின்றனர். பாண்டியர், சோழர், டச்சு காசுகளை கண்டறிந்துள்ள மாணவர்கள் தற்போது இலங்கை, மலேசியா, தென்னாப்ரிக்கா நாட்டின் காசுகளை கண்டெடுத்துள்ளனர். இப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு தெரிவித்ததாவது: திருப்புல்லாணி இந்திரா நகரை சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவர் பாதசெல்வம் சேதுக்கரைப்பகுதியில் இலங்கை சதம் காசும், திருப்புல்லாணி பகுதியில் தென்னாப்ரிக்க பென்னி காசினையும் கண்டெடுத்துள்ளார்.
இலங்கை சதம்: இலங்கையில் சதம் கணக்கில் காசுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் ஒரு சதம் காசும், அரை சதம் காசும் கிடைத்துள்ளது. இந்த வட்ட வடிவ செப்பு காசுகளில் ஒருபுறம் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மறு பக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது. அதனருகில் காசின் மதிப்பு தமிழிலும், சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளது. அரை என்னும் பின்னம் பத்தாம் நுாற்றாண்டு கல்வெட்டில் உள்ளது போன்று தமிழ் எண்ணுருவில் உள்ளது. இதன் காலம் கி.பி.1901, 1912, 1926, ஆகிய ஆண்டுகளை சேர்ந்தது.
பென்னி காசு: தென்னாப்ரிக்கா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலமான 1941 ல் வெளியிடப்பட்டது. இதில் மன்னர் மற்றும் பாய்மரக்கப்பலின் படங்கள் உள்ளன. இது வட்ட வடிவ வெண்கலத்தால் ஆன காசு ஆகும்.
சென்ட் காசு: திருப்புல்லாணியை சேர்ந்த மு.விசாலி என்ற பத்தாம் வகுப்பு மாணவியின் பாட்டனார் குப்பு, இந்திய விடுதலைக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங்குக்கு வேலைக்காக சென்றவர், திரும்பி வந்த போது ஒரு சென்ட் காசினை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனை இவரது வீட்டில் இருந்து மாணவி கண்டெடுத்துள்ளார். ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1943 ல் வெளியிடப்பட்டது. வெண்கலத்தால் ஆன சதுர வடிவ காசின் முனை வட்ட வடிவமாக உள்ளது. ‘கமிஷனர்ஸ் ஆப் கரன்சி மலேயா’, வால் வெளியிடப்பட்டுள்ளது.
வரலாற்று தொடர்பு: திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் ராமாயாணத்துடன் தொடர்புடையன. சேதுக்கரை கடலில் புனித நீராடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்துள்ளது. புனித நீராடிய பக்தர்கள் ஆடைகள், காசுகளை கடலில் வீசி எறிவார்கள். வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு கடலில் கலக்கும் பகுதியாக சேதுக்கரை உள்ளது. இதன் காரணமாக கடலோரப்பகுதிகளில் பழைய காசுகள் கிடைத்துள்ளது. இப்பகுதியில் உள்ளவர்களை ஆங்கிலேயர்கள் வேலைக்காக இலங்கை, மலேசியா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் இந்த காசுகள் வந்திருக்கலாம், என அவர் தெரிவித்தார்.