பதிவு செய்த நாள்
19
ஜன
2018
12:01
மாமல்லபுரம் : பல்லவ கலைச்சின்னங்களின், சரித்திர பின்னணியை, சுற்றுலாப் பயணியருக்கு முறையாக விளக்க, சுற்றுலா வழிகாட்டி பயிற்சியளிக்க, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.பல்லவ சிற்பக்கலை சுற்றுலா இடமாக, மாமல்ல புரம் விளங்குகிறது. சர்வதேச நாடுகளில், ஒற்றைப்பாறை சிற்பம், பாறை புடைப்புச் சிற்பம்; பாறை குடவரை சிற்பம்; பாறை வெட்டு கற்களாலான கோவில் என, பலவகை சிற்பங்கள், ஒரே இடத்தில் இடம்பெற்ற இடமாக, இவ்வூர் புகழ்பெற்றது.கடற்கரைக்கோவில்பிற பகுதி பாறையில் வெட்டப்பட்ட கற்களால் உருவான கட்டுமான வகையைச் சேர்ந்தது. சைவ, வைணவ என, இரு மூலவர் கருவறைகள் கொண்டது. தற்போது வழிபாட்டில் இல்லை.ஐந்து ரதங்கள்வடக்கு - தெற்கு நீளமான ஒற்றைப் பாறைக்குன்றில், கோவில் வடிவில், தனித்தனி ரதம் செதுக்கப்பட்டது. தர்மராஜ, பீம, சகாதேவ, அர்ச்சனர், திரவுபதி என, தனித்தனி ரதங்கள், வெவ்வேறு வடிவம் மற்றும் மேற்கூரையுடன் அமைந்துள்ளன. கடவுள் சிற்பங்கள், யானை, சிங்கம், நந்தி சிற்பங்களும் உள்ளன.
அர்ச்சுனன் தபசு: இச்சிற்பம், பாறை விளிம்பில் புடைக்கப்பட்டது. வடக்கு - தெற்காக நீண்டு, உயர்ந்த பாறைக்குன்றின் கிழக்கு பகுதி விளிம்பில், நிலமட்டத்தின் கீழ், மேல் புடைக்கப்பட்டுள்ளது.சிவபெருமான், தேவர்கள், பக்தர்கள், சித்தர்கள், முனிவர்கள், வனம், அதன் உயிரினங்கள், நாகங்கள், பாயும் கங்கை நதி என, சிற்ப தொகுதியாக உள்ளது. தவம் செய்வது சிவபெருமானா, பகீரதனா என, இரு வேறு கருத்து நிலவுகிறது.குடவரை மண்டபங்கள்பாறைக்குன்றின் உட்புறம் குடையப்பட்டுள்ளது. திருமூர்த்தி, கிருஷ்ணர், தர்மராஜர், ராமானுஜர், வராகர், மகிஷாசுரமர்த்தினி, கோடிக்கல், கோனேரி என, பலரது பெயர்களில், சரித்திர, புராண சிறப்பு குடவரை மண்டபங்கள் உள்ளன.வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட, 32 கலைச்சின்னங்களுடன், சிற்ப அருங்காட்சியகமாக அமைந்துள்ளது. தொல்லியல் துறை பராமரித்து, பாதுகாக்கிறது.இத்தகைய கலைப்படைப்புகளை காண, உள்நாடு, சர்வதேச பயணியர் சுற்றுலா வரும் நிலையில், முக்கிய சின்னங்களில் மட்டுமே, அவற்றின் சரித்திர பின்ணனி விளக்க தகவல் இடம்பெற்றுள்ளது. பிற சின்னங்களில், விளக்க தகவல் இல்லை.சுற்றுலாப் பயணியர், சரித்திர சிறப்பை அறியாமல், பொழுதுபோக்கு நோக்கில் காண்கின்றனர். அவற்றின் சிறப்பு, அமைப்பு, பின்னனி தகவல், உருவான காலம் என, விளக்க தகவல் இருந்தால், பயணியர் அறிவர்.இது ஒருபுறமிருக்க, சிற்பங்கள், அவற்றின் சரித்திர தகவல்களை அறிய விரும்பும் பயணியர், இங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளை நாடுகின்றனர். அவர்களும், பயணியரிடம், விருப்பம் போல் கட்டணம் பெற்று விளக்குகின்றனர்.குறிப்பிட்ட சிலரே, தமிழக சுற்றுலாத்துறையிடம், சுற்றுலா வழிகாட்டல் நடைமுறை பயிற்சி மட்டும் பெற்று, அங்கீகாரம் பெற்றுள்ளனர்.தொல்லியல் துறையின், சிற்பங்கள் குறித்த அதிகாரபூர்வ பயிற்சி பெறவில்லை. தொல்லியல் சார்ந்த தகவலாக இன்றி, அவரவர் அறிந்ததையே தெரிவிக்கின்றனர்.பெரும்பாலோர் பயிற்சியோ, அங்கீகாரமோ இன்றி, வாழ்வாதாரம் கருதி, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் தெரிவிக்கும், தொல்லியலுக்கு மாறான தகவல்களால், பயணியர் சரியாக அறியவும் இயலாது. இதை தவிர்க்க, சுற்றுலா வழிகாட்டியாக ஈடுபட விரும்புவோருக்கு, சுற்றுலாத்துறை, தொல்லியல் துறையுடன் இணைந்து, முறையான பயிற்சியளித்து, அங்கீகாரம் வழங்க, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.