பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
வேலூர்: வேலுார் மாவட்டம், காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில், மாதா அமிர்தானந்தமயி நடத்திய சத் சங்கம், பஜனை, தியானம், தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாதா அமிர்தானந்த மயி உருவ தபால் தலையை வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது: இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும், மாதா அமிர்தானந்த மயி சேவா சமிதி சேவை புரிந்து வருகிறது. ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை, அடிப்படை நோக்கமாக வைத்து, இந்த அமைப்பு செயல்படுகிறது. ஆதரவற்ற நிலையிலுள்ள, 50 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விச் சேவை, ஒரு லட்சம் விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்படுபோது, தன்னலமற்ற சேவை மற்றும் உதவிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு அன்பு, பக்தி ஆகிய இரண்டையும் முக்கிய கொள்கைகளாக கடைபிடித்து வருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வி.ஐ.டி., பல்கலை துணைத்தலைவர், ஜி.வி.செல்வம், சன்பீம் பள்ளிகளின் தலைவர் டி.ஹரிகோபாலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாதா அமிர்தானந்த மயி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரம்மஸ்தான ஆலய ஆண்டு விழாவில் இன்றும், நாளையும் பங்கேற்கிறார். இதில், சத் சங்கம், பஜனை, தியானம் உள்ளிட்டவை நடக்கின்றன.