பதிவு செய்த நாள்
23
டிச
2011
10:12
ஈரோடு: சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, 25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவாக்கிய, சிவ சிம்மாசனத்தை வைத்து, பவானியில் நேற்று விசேஷ வழிபாடு நடந்தது.ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள். சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது. இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது. இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது. ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.நாமக்கல் மாவட்டம், முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் மேகநாதன். இவர், 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு, சிவ சிம்மாசனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேதகத்தில் நாகலிங்கம், பான, படிகலிங்கம் ஆகியவை கொண்டு, சிவ சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, இந்த சிவ சிம்மாசனம் பவானி, கூடுதுறை ரோட்டரி ஹாலில், பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மேகநாதன் கூறியதாவது: தேக்கு மரத்தால் சிம்மாசனம் ஒன்றை உருவாக்கினேன். அதன்பின், ருத்ராட்ச மணிகளை சிம்மாசனத்தில் ஆணி கொண்டு பதித்தேன். ஒன்பது வகையான நவரத்தினங்கள், மரகதலிங்கம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்துள்ளேன். ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைத்துள்ளேன். சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள். மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளேன். தட்சிணாமூர்த்திக்குரிய ஓலைச்சுவடிகள், சிவனுக்குரிய அனைத்து அம்சங்கள், கல்விக்காக சரஸ்வதியின் எந்திரம், நேபாளத்தில் இருந்து பிருத்தியங்காதேவி எந்திரம், நாகதோஷத்தை நீக்கவல்ல கோமேதக நாகலிங்கம் ஆகியவற்றையும், சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்துள்ளேன். சிம்மாசனத்தை வணங்குவதால், முன்னோர் சாபம், பெண்கள் சாபம், குலதெய்வ குறைகள், திருமண தடைகள், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, சிறந்த கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பெற்று, மனம் நிம்மதி அடையும். இந்த சிம்மாசனத்தை சிதம்பரம், திருநள்ளாறு, காசி ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.இவ்வாறு, மேகநாதன் கூறினார்.