பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
திருப்பதி: திருமலையில், ரதசப்தமியை முன்னிட்டு, ஏழு வாகனங்களில், மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். ஆந்திர மாநிலம், திருமலையில், ஆண்டுதோறும், தை மாதம் அமாவாசைக்கு பின் வரும் சப்தமியை, ரதசப்தமியாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. சூரிய பகவானின் பிறந்த நாளாக கருதப்படும் ரத சப்தமி அன்று, மலையப்ப சுவாமி சப்த வாகனங்களில், மாடவீதியில் வலம் வருவது வழக்கம். அதன்படி, நேற்று ரத சப்தமியை முன்னிட்டு, திருமலையில், ஏழு வாகன சேவை நடந்தது.
அதிகாலை, 5.30 மணிக்கு சூரியபிரபை வாகனத்தில் துவங்கிய சேவை, சின்னசேஷ, கருட, அனுமந்த, கல்பவிருட்ச, சர்வபூபால, சந்திரபிரபை வாகனத்துடன் முடிவடைந்தது. இதைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். மதியம், திருக்குளத்தில், சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருக்குளத்தில் புனித நீராடினர். வாகன சேவையை காண, மாடவீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு, 24 மணிநேரமும் அன்னதானம், குடிநீர், பால், டீ, காபி, மோர், சிற்றுண்டி உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்கியது. வாகன சேவையின் முன்னும் பின்னும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.