பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
ஈரோடு: விவேகானந்தரின், சீடர் நிவேதிதை ரதத்திற்கு, மாநகர மக்கள் சார்பில், சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ஆளுமைக்கு உட்பட்ட, அயர்லாந்தில் டங்கன்னம் என்ற ஊரில், 1867 அக்., 28ல் பிறந்த, மார்கரட் எலிசபெத், லண்டனில் விவேகானந்தரின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் உரையால் ஈர்க்கப்பட்டு, விவேகானந்தரின் பிரதம சீடரானார். அவரின் அழைப்பால், இந்தியாவுக்கு வந்த மார்கரட், நிவேதிதை என்ற பெயர் மாற்றத்துடன் ஆன்மிகப்பணியில் உதவியாக இருந்தார். அவரின், 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பாரதத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பரப்பும் வகையில், சகோதரி நிவேதிதையின், 150 ரத யாத்திரை நேற்று முன்தினம் கோவையில் தொடங்கியது. இதில், 27 மாவட்டங்களில், 30 நாட்கள், 3,000 கி.மீ., பயணித்து, இரண்டு லட்சம் மாணவியரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், சுற்றுப்பயணம் முடித்த ரத யாத்திரை, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்தது. கோபி பி.கே.ஆர்., கல்லூரி, ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, கவுந்தப்பாடி வழியாக மாலை ஈரோட்டு வந்தது. ஈரோட்டில் இந்து கல்வி நிலையம், வேளாளர் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு பிறகு, கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் சூரம்பட்டிவலசு, காளைமாட்டு சிலை, கருங்கல்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம் சென்றது. பா.ஜ., மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி., சவுந்திரம், டாக்டர் நிர்மலா சதாசிவம், சரஸ்வதி, சாய்பாபா அறக்கட்டளை சிவனேசன், இந்து முன்னானி மாநில துணைத் தலைவர் பூசப்பன், மற்றும் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.