பதிவு செய்த நாள்
25
ஜன
2018
02:01
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தின் போது சர்வ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி,வள்ளி,தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து கொடிகட்டி மண்டபத்தை அடைந்தனர். கொடிமரம், மயில்,சேவல், வேல் வரையப்பட்ட கொடிப்படத்திற்கு சிறப்பு பூஜையும், கொடிமரத்திற்கு கலச புனிதநீர் அபிஷேகம் நடந்தது. வாத்தியமேளங்கள், வேதபாராயணம், திருமுறைகள், வேத கோஷங்கள் முழங்க பக்தர்களின் பழநி முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என சரணகோஷத்துடன், கொடியேற்றம் நடந்தது. முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானை சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தைசப்பூசத்திருவிழா இன்று(ஜன., 25) துவங்கி, பிப்.,3 வரை நடக்கிறது. ஜன., 30ல், திருக்கல்யாணமும், ஜன., 31 தைசப்பூச தேரோட்டம் நடக்கிறது. தைசப்பூசம் பவுர்ணமிஅன்று, மாலை, 6:22 மணி முதல் இரவு, 8:41 மணி வரை, சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால், வழக்கமாக பெரியநாயகியம்மன் கோவிலில் மாலை, 4:00 மணிக்கு நடைபெறும், தைப்பூசத் தேரோட்டம், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.