பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
ஆனைமலை:தைப்பூசத்தை முன்னிட்டு ஆனைமலை பகுதியிலுள்ள பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரை செல்ல துவங்கியுள்ளனர். ஆனைமலை, கோட்டூர் பகுதி போலீசார், பக்தர்களின் பாதுகாப்புக்காக ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரை செல்ல துவங்கியுள்ளனர். ஆனைமலை சுற்றுப் பகுதியில் இருந்து பழநிக்குச் செல்லும் பக்தர்கள், ஆனைமலை - உடுமலை ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கு, பொள்ளாச்சி போலீசார் மூலம் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் (ரிப்ளக்டர்) வழங்கப்படுகிறது. ஆனால், ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள போலீசார் சார்பில், பக்தர்களின் பாதுகாப்புக்காக ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் வழங்கப்படுவதில்லை. மேலும், பாதயாத்திரை மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் இல்லாததால், இரவு நேரங்களில் பக்தர்கள் அச்சத்துடனே, ஆனைமலை - உடுமலை ரோட்டில் செல்கின்றனர். வாகன ஓட்டிகள் ரோட்டோரத்தில் பக்தர்கள் நடந்து செல்வது தெரியாமல் சிரமப்படுகின்றனர். ஆனைமலை, கோட்டூர் பகுதியிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, போலீசார் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள்இலவசமாக வழங்க வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பதே அனைவரின்கோரிக்கையாகும்.