பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழாவில் மயான பூஜை வரும், 29ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, மயான பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொள்ளாச்சி அருகே, ஆனைமலை, உப்பாற்றங்கரையில், மாசாணியம்மன், சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் வரும் அமாவாசையில், கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றிய 14ம் நாள் இரவு ஊர்வலமாக மயான கரைக்கு சென்று மயான மண்ணினால், அம்மனின் உருவச்சிலை செய்து, அதற்கு சக்தி பூஜை செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டு குண்டம் திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வரும், 29ம் தேதி நள்ளிரவு 1:00 மணிக்கு மேல் மயான பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் மண்ணை சமப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், பக்தர்கள் அமரும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்பு கம்புகள் நடப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் பிப்., 1ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.