பதிவு செய்த நாள்
29
ஜன
2018
12:01
திருப்போரூர் : கந்தசுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு இரு நிர்வாகமும் கட்டணம் வசூலித்தும், வாகன நிறுத்துமிடம் இல்லாத நிலை தொடர்வதால் பக்தர்கள் வேதனை படுகின்றனர். திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீட்டிற்கு நிகரான இக்கோவில், தொண்டை நாடு மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலுள்ள பக்தர்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.இங்குள்ள கந்தசுவாமி பெருமான் சுயம்பு மூர்த்தியாவார், எந்திர வழிபாடும் இங்கு நடைபெறுகிறது. நவகிரகங்களில் மும்மூர்த்தி சன்னதிகள் மட்டுமே இங்கு அமைந்துள்ளது. இது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தகைய சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வரும் பக்தர்கள் அரசு பேருந்துகள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்டவைகளில் வந்து செல்கின்றனர்.
பக்தர்களின் வாகனங்கள் நகரில் நுழையும்போது தெருக்களின் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப பேரூராட்சி மற்றும் கோவில் அறநிலையத்துறை நிர்வாகத்தினர் வாகனங்களுக்கு கட்டணங்களை வசூலிக்கின்றனர்.ஆனால், இரு நிர்வாகத்தினரும் தனி வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தாமல் உள்ளனர். இதனால், பக்தர்கள் தங்கள் வாகனங்களை சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை நிறுத்தமுடியாமல் தவிக்கின்றனர். விழா நாட்களில் திருப்போரூர் மாடவீதிகள் மற்றும் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது. மேலும், இப்பிரச்னையால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கையும் குறிப்பிட்ட நாட்களில் முடங்குகிறது. எனவே, பேரூராட்சி மற்றும் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடங்களில் சிமென்ட் தரை தளம் அமைத்து, பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடப்படப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை: கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் கூடுகிறது. முன்பெல்லாம் விஷேச நாட்களில் மட்டும்தான் பக்தர்கள் அதிகளவில் வருவர். ஆனால் தற்போது சாதாரண நாட்களில் கூட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், கிருத்திகை, முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நகருக்குள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இவ்வாறான வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக வாகன நிறுத்துமிடம் என்பது இப்பகுதியில் பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், அதற்கான கட்டணங்கள் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இடமில்லாததால், வாகனங்கள் மாட வீதிகளிலும், சாலைகளிலும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இந்நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உள்ளூர் வாசிகளும் இதை பலமுறை எடுத்துகூறி பார்த்துவிட்டனர். எந்த நிர்வாகமும் அதை கண்டுகொள்ள வில்லை. இனியும் இதில் அலட்சியம் காட்டாமல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முயற்சி எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.