பதிவு செய்த நாள்
29
ஜன
2018
12:01
குனியமுத்துார் : குனியமுத்துாரிலுள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில், நேற்று பள்ளி குழந்தைகளின் பஜனை நடந்தது. ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 93வது பிறந்த நாளை முன்னிட்டு, உலக அமைதி மற்றும் மக்களின் நலன் மேம்பட, இறைவன் ஸ்ரீ சத்யசாய் திவ்ய நாம அகண்ட பஜனை என்னும், 93 மணி நேர சிறப்பு தொடர் வழிபாட்டு நிகழ்ச்சி, குனியமுத்துார் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில் நடந்து வருகிறது. கடந்த, 25ம் தேதி காலை துவங்கிய வழிபாட்டின் முதல் பகுதியில், சத்ய சாய் நிறுவனத்தார் மற்றும் குனியமுத்துார் சமிதியினர் பங்கேற்று, பாடல்களை பாடினர். மதியம், திருநெல்வேலி, மடிப்பாக்கம் கமிட்டியினரின் பஜனை நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பஜனை நடந்தது. காலை, 11:00 மணி முதல், பள்ளி குழந்தைகளின் பஜனை பாடல் நடந்தது. 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இன்று காலை, 7:00 மணிக்கு, மகா மங்கள ஆரத்தியுடன் பஜனை நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோவை மெட்ரோ மாவட்ட தலைவர், குனியமுத்துார் சத்ய சாய் சமிதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.