பதிவு செய்த நாள்
29
ஜன
2018
12:01
திருவண்ணாமலை: இந்து கோவில்களில் உழவாரப்பணியை வலியுறுத்தி, திருவண்ணாமலையில், சிவனடியார்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணியில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில், சிவனடியார்கள், இந்து கோவில்களில் உழவாரப்பணி செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அருணாசலேஸ்வரர் கோவில் முன் இணை ஆணையர் ஜெகன்நாதன் பேரணியை துவக்கி வைத்தார். ராஜகோபுரம் முன் துவங்கிய பேரணி, மாட வீதியை சுற்றி வந்தது. பேரணியின்போது, உழவாரப்பணி செய்வதன் மூலம், கோவில்களை தூய்மையாக வைத்திருந்தல், கோவில் சொத்துக்களை பொதுமக்களே மீட்டு, கோவில் வளர்ச்சிக்கு உதவுவது, நீர் ஆதாரத்தை பெருக்கிடும் வகையில் கோவில் குளம் சீரமைத்தல், கோவில் சிலை திருட்டை தடுத்தல்; கோவில் கோசாலையை பாதுகாத்தல், கோவிலிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், கழிப்பிட வசதி, தங்குமிடம் செய்து தருதல், அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு செய்து தருதல், கோவில் ஆகம விதி பின்பற்றுதல் உட்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி, பதாகைகளை கையில் ஏந்தியாவறு எடுத்து சென்று மாட வீதி வலம் வந்தனர். இதில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.